“மக்களவை சீட் வழங்கவில்லை என்றால்…” : ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா முக்கிய கோரிக்கை!

மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்றால் மாநிலங்களவை எம்.பி. பதவியாவது கொடுக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மமகவுக்கு ஒரு சீட்டாவது கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமைக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை திமுக நிராகரித்து விட்டது.

இதனால் மனித நேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி கொதிப்பான கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு கூட்டத்தை அவசரமாக மார்ச் 13ஆம் தேதியான இன்று மனித நேய மக்கள் கட்சி கூட்டியது. இக்கூட்டம், அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இதில், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3 தீர்மானங்கள்…

“நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்க தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு.

2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் வேளையில் மமகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும். அதுவே சமூகநீதி ஆகும். ஒருவேளை 2024 மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டால் 2025ல் தமிழ்நாட்டிலிருந்து நிரப்பப்படும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயம் மமகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஒன்றிய அரசு இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவித்து அரசியல் சூதாட்டத்தை அரங்கேற்றியுள்ளது. அதற்கு இச்செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்குத் தொடுப்பதோடு களத்திலும் தனது கண்டனத்தைப் பதிவு செய்யும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, “மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டை எங்கள் கட்சிக்கு சமூக நீதியை காக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் ஒதுக்க வேண்டும். இல்லையெனில், 2025-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலிலாவது ஒரு சீட்டை எங்களுக்குத் தர வேண்டும். அந்த தேர்தலில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 4 இடங்களில் திமுக வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதில் ஒரு இடத்தை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வெளிநாட்டில் தங்கச் சுரங்கம்…விதவிதமாய் துப்பாக்கி… டுபாக்கூர் கமாண்டோவை ’தூக்கிய’ போலீஸ்!

வெளிநாட்டில் தங்கச் சுரங்கம்…விதவிதமாய் துப்பாக்கி… டுபாக்கூர் கமாண்டோவை ’தூக்கிய’ போலீஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts