சொல்லிலும் செயலிலும் அலட்சியம் கூடாது என்று அமைச்சர்கள் முதல் திமுக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப நாட்களாக திமுக அமைச்சர்கள் சிலரது பேச்சு சர்ச்சையாகி வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி மு.க ஸ்டாலின், நச்சு அரசியலுக்கு இடம் அளிக்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 3) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கெனவே செப்டம்பர் 26ம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.
நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.
மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும்,
கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா