மணிப்பூரை வைத்து ஸ்டாலின் விளையாடுகிறார்: அண்ணாமலை புகார்!

Published On:

| By christopher

dmk is the main party in india divide the country: annamalai

ஸ்டாலின் முதல்வர் என்பதை மறந்து முழுநேர அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பதைத்தான் மணிப்பூர் குறித்த அவரது கருத்து எடுத்துக்காட்டுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை காரப்பாக்கத்தில் இன்று (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முழுநேர அரசியல்வாதி

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ”மணிப்பூர் குறித்து முதலமைச்சர் திடீரென இப்போது எழுந்து பேசுகிறார். அவருக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. தமிழகத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு 210 நாள்கள் ஆகி விட்டது. அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மணிப்பூரின் பிரச்சனைகளை மத்திய அரசு முழுவதுமாக சரி செய்யும். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக மாநில அரசு 6 நபர்களை கைது செய்துள்ளது. அவர்களுக்கு தூக்கு தண்டனையை பெற்று தருவோம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் 2016 க்கு பிறகுதான் அமைதியை நோக்கி சென்றது , அதற்கு முன்பு அமைதி இல்லாமல்தான் இருந்தது.

ஸ்டாலின் முதலமைச்சர் என்பதை மறந்து முழுநேர அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பதைத்தான் மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அவர் எழுதிய கடிதம் காட்டுகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் தனது மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்தவே முதலமைச்சர் அவ்வப்போது விளையாட்டை பற்றி பேசுகிறார். கேலோ இந்தியா ‘ போட்டிகளை ஆரம்பித்த பாஜகவிற்கு அப்போட்டியில் பங்கேற்கும் மணிப்பூர் வீரர்களுக்கு எப்படி பயிற்சிதர வேண்டும் என தெரியும்.

தமிழகத்தில் பிரதமர் போட்டி?

தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. கடந்த 2 ஆண்டில் என்ஐஏ பல சோதனைகளை தமிழகத்தில் நடத்தியுள்ளது. தமிழகத்தில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளது.

பிரதமர் தமிழகத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாரா என தேசியத் தலைமையிடமிருந்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தொண்டர்கள், மக்கள் பிரதமர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

நாய் கோடு போட்ட கதை

இந்தியா என்று சொல்லும்பொழுது உள்ளத்தில் இந்தியர் என்ற உணர்வு இருக்க வேண்டும், ஆனால் இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக ஒருகாலத்தில் பிரிவினை பேசிய கட்சி, பிரிவினைவாத தடுப்பு சட்டத்தால் அது பற்றி பேசுவதை பின்னர் நிறுத்தியது.

திமுக இந்தியா பற்றி பேசுவது வேடிக்கையானது. இன்றும் மாநிலங்களிடைய பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுகதான்.

உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா போன்றவர்கள் காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதை எதிர்த்தவர்கள். ஜேஎன்யூ-வில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்ட கட்சி காங்கிரஸ்.

அந்த வகையில் இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாத எண்ணம் கொண்ட கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி என்பது புலியைப் பார்த்து நாய் கோடு போட்ட கதைதான். மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள்.

I.N.D.I.A கூட்டணிக்கு யார் தலைவர்?

காங்கிரஸ் சில மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சி செய்கிறது. ஆனால் அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப கட்சிகளை காங்கிரஸ் இணைத்து வைத்துள்ளது.

காங்கிரஸை விட அதிகமான மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது.  தேசிய ஐனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சி வேறுபாடு இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் காங்கிரசை அந்த கூட்டணியில் அவ்வாறு ஏற்றுள்ளார்களா..? நிதிஷா?, மம்தாவா?, காங்கிரஸா? யார் தலைவர் என்றே தெரியவில்லை..? அங்கு யார் பிரதமர் வேட்பாளர்? தற்போது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களை குத்தி கொன்ற கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கட்சியின் வளர்ச்சிக்காக நடை பயணம்

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் நான் நடை பயணம் சென்றாலும் செல்போன் மூலமாக பிற கட்சி தலைவர்களுடன் பேச முடியும் , முன்பெல்லாம் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். எனது நடை பயணத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சென்று அந்த தொகுதிக்கு பிரதமர் என்ன செய்திருக்கின்றார்? அந்த தொகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்ற விவரத்தை சொல்ல உள்ளேன். நடைபயணம் செல்வதற்கான உரிய காலம் இதுதான்.

பாஜக ஒரு போதும் தேர்தலுக்கான அரசியலில் மட்டும் ஈடுபடாத கட்சி , கட்சியின் வளர்ச்சிக்காகவே நடை பயணம் செல்கின்றேன் . நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கும் எனது நடைபயணத்திற்கு காரணம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

KoreaOpen2023: ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா ஜோடி!

அதிமுக கொடிகளோடு சசிகலா திடீர் கொங்கு பயணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share