பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழா மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்குகின்ற வகையில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகைப்பட கண்காட்சியைத் துவக்கிவைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அவர்களது அழைப்பை ஏற்று புகைப்பட கண்காட்சியை துவக்கி வைக்க வருவதாக கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று கூறி தேர்தலை சந்தித்த கமல்ஹாசன், சமீப நாட்களாக திமுக கூட்டணியுடன் இணக்கமாக உள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து வெற்றி பெற்றார்.
அவரது கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியதால், அந்த ஒரு சீட்டை 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மநீம கட்சிக்கு ஒதுக்கி கமல்ஹாசனை களமிறக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.
இதனால் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
கோரிக்கையை தாமதமாக நிறைவேற்றியது ஒரு சாதனையா? – டி.ஆர்.பாலு
கல்வி நிறுவனங்களில் ‘சாதி’ தற்கொலைகள் : சந்திரசூட் வேதனை