”10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது” என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
”இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல்சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பதுபோல் அமைந்திருக்கிறது.
அதனால்தான் ’இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது’ என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட்,
தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே ’நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால்,
மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார்.
இறுதியில் ’இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூக நீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது’ என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
ஆகவே, நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட,
அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட,
சமூக நீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (review petition) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று (நவம்பர் 9) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,
”திமுக எப்போதும் சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் கட்சி. உச்சநீதிமன்றத்திலேயே சமூக நீதி மறுக்கப்படுகிறது.
இதனால், சீராய்வு மனு தாக்கல் செய்ய, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
தலித் கிறிஸ்தவர்-தலித் முஸ்லிம்: ஒதுக்க நினைக்கிறதா மத்திய அரசு?