ராஜன் குறை
திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 75 ஆண்டுகள் ஆன பவளவிழாவை இருமுறை கொண்டாடியுள்ளது. முதல்முறை கட்சியினருக்கான விழாவாக சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது. பின்னர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து கட்சியின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சியில் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாடியது. இரண்டாவது கொண்டாட்டத்தைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளதும், கட்சியினரால் கொண்டாடப்படுவதுமான மாற்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளதுதான். இந்த நிகழ்வு அடுத்த தலைமுறை தமிழ்நாடும் திராவிட கருத்தியல் பயணத்தில் தொடரும் என்பதற்குக் கட்டியம் கூறுவதாகவே ஆதரவாளர்கள் கருதி மகிழ்கின்றனர்.
பவள விழா கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கட்சியின் கொள்கைப் பயணத்தையும், அதன் இலக்கையும் மிகச் சிறப்பாக ஒரே வரியில் முத்தாய்ப்பாகக் கூறினார். அது “மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்” என்பதுதான். கழகத்தின் நூற்றாண்டு விழாவிற்குள் அதனை செய்து முடிப்போம் என சூளுரைத்தார். இதைத்தான் அண்ணாவும் திராவிட இயக்கத்தின் லட்சியமாகக் கூறினார். எந்தக் கூட்டாட்சி அமைப்பிலும் பங்கெடுப்போம், எங்கள் சுயாட்சி உரிமைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறினார். அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்க்கி முன்வைத்த உலகக் கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தையும் கூட வரவேற்றார். அந்த வகையிலே தி.மு.க-வின் கொள்கைப் பயணம், உலக மக்களாட்சி வரைபடத்திலே தொடர்கிறது.
இந்த நேரத்திலே நாம் மக்களாட்சி என்றால் என்ன, கூட்டாட்சி என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது, தி.மு.க-வின் கொள்கைப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும். இந்த அடிப்படையான அரசியல் தத்துவ அம்சங்கள் புரியாதவர்கள்தான் மாநில சுயாட்சி என்பது இந்திய தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என்றெல்லாம் மனம் குழம்புகிறார்கள்; பிறரையும் குழப்புகிறார்கள்.
உண்மையில் இந்திய ஒற்றுமைக்கான சிறந்த உத்தரவாதம் மாநில சுயாட்சியையும், ஒன்றிய கூட்டாட்சியையும் உறுதி செய்வதுதானே தவிர ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பதல்ல. தேசிய இறையாண்மை என்ற பெயரில் ஒரே புள்ளியில், ஒற்றை அரசில் அதிகாரத்தை குவிப்பவர்களே தேசத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதை சோவியத் யூனியன் வரலாற்றையும், இன்றைய ரஷ்ய-உக்ரைன் போரின் வரலாற்றுக் காரணங்களையும் ஊன்றிப் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், அப்படி ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிக்க விரும்பும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியின் மேலும், பல மாநிலக் கட்சிகள் மேலும் ஒரு விநோதமான குற்றச்சாட்டை வைக்கிறது. அது என்னவென்றால், அந்தக் கட்சிகள் எல்லாம் குடும்ப வாரிசுகளுக்கு தலைமைப் பொறுப்பைத் தருவதன் மூலம் மக்களாட்சிக்கு எதிராக இருக்கின்றனவாம். தலைவரே தன் வாரிசை நியமிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸால் இயக்கப்படும் பாரதீய ஜனதா கட்சிதான் மக்களாட்சியை காக்கப் போகிறதாம்.
மத அடையாளத்தைப் பயன்படுத்தி வெறுப்பரசியல் செய்யும் பாரதீய ஜனதா கட்சி, பாசிச திட்டத்தையே மக்களாட்சி என்று லேபிள் ஒட்டி பரப்பப் பார்க்கிறது. அதற்கான வழிமுறையாகத்தான் வெகுஜன கட்சிகளின் வாரிசு அரசியல் எதிர்ப்பு மாய்மாலம் செய்கிறது. பாஜக கட்சியில் எத்தனையோ தலைவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பதவி வழங்கப்படுவதை, ஜெய் ஷா போல பயன்பெறுவதை மறைத்துவிட்டு கட்சி தலைமைக்கு இதுவரை வாரிசு தலைவர் வரவில்லை என்பதை மட்டும் காட்டி நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
மாநில சுயாட்சி என்றால் என்றால் என்ன, கட்சித் தலைமை என்றால் என்ன என்பதை துல்லியமாகப் புரிந்துகொள்ள நாம் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களாட்சி என்பதன் அடிப்படை என்ன?
மக்களாட்சி என்பதன் அடிப்படை அதிகாரம் ஒரு புள்ளியில் குவியக் கூடாது என்பதுதான். அதனால் ஒவ்வொரு தனி மனிதரும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்டவர்கள் என்பதையே அது சுதந்திரவாத அடிப்படையாகக் கொள்ள விரும்புகிறது. அப்படி ஒவ்வொருவரும் தன்னிச்சையாக நடந்துகொண்டால் சமூக கூட்டியக்கம் எப்படி நடக்கும் என்ற கேள்வி எழும். அதற்குத்தான் சமூக ஒப்பந்தமாக பொதுவான சட்டத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதையும் மக்களாட்சி தத்துவம் ஏற்கிறது.
அப்படியான சட்டங்களின் தொகுப்பு குடியரசின் அரசியலமைப்பு சட்டமாக ஏற்கப்படும். அந்தச் சட்டமே சமூக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் என்பதால் சட்டத்தின் ஆட்சி எனப்படும். அது ஒருபுறமிருக்க, நடைமுறையில் நிர்வாகத்தைச் செயல்படுத்த, அனைவரும் சமூக ஒழுங்கைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க, நெறிப்படுத்த அரசாங்கம் என்ற ஒன்று வேண்டுமல்லவா? அதைச் செய்வதற்குத்தான் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி நகர்மன்றம் போன்றவையும், அவற்றில் பெரும்பான்மை கொண்ட கட்சியினரால் உருவாகும் அமைச்சரவை போன்றவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுதான் மக்களாட்சி எனப்படுகிறது. அதே சமயம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் விருப்பத்திற்கு ஆட்சி செய்ய முடியாதபடி அரசியலமைப்பு சட்டம் நெறிமுறைகள் வழங்குகிறது.
இறையாண்மை என்ற வார்த்தையை முடிவெடுக்கும் அதிகாரம் என்று வைத்துக்கொண்டால் அது கீழ்க்கண்ட பல அடுக்குகளில் பிரிக்கப்படுவதுதான் மக்களாட்சி.
- தங்கள் வாழ்க்கையை விருப்பப்படி வாழும் சுதந்திரம் கொண்ட குடிநபர்கள் (தனி நபர் இறையாண்மை).
- சமூக இயக்கத்தின் அடிப்படைகளை வரையறுத்து, பொதுவான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பல்வேறு மட்டங்களில் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பு சட்டம் (சட்டத்தின் ஆட்சி).
- உள்ளூர் அளவில், மாநில அளவில், தேசிய அளவில் பல்வேறு முடிவுகளை விவாதித்து எடுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் (மக்களாட்சி).
- மக்கள் பிரதிநிதிகளின் அவைகளில் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர், முதலமைச்சர், மேயர் முதலானவர்கள், அவர்களது மந்திரி சபை அல்லது கவுன்சில் உறுப்பினர்கள், அவர்கள் தலைமையில் இயங்கும் அரசு இயந்திரம் (அரசாங்கம்).
- மக்களும், அரசும் சட்டப்படி நடப்பதை உறுதி செய்யும். தவறிழைத்தால் தண்டிக்கும் நீதிமன்றங்களின் படிநிலை அமைப்பு (நீதிமன்ற இறையாண்மை).
முடியாட்சியில் முடிசூடிய மன்னரிடம் ஒற்றைப் புள்ளியில் குவியக்கூடிய அதிகாரங்களை இப்படிப் பல தளங்களில் பரவலாக்குவதுதான் மக்களாட்சி என்பதாகும். மன்னராட்சியிலும் உண்மையில் மந்திரிகள், மதகுருக்கள், தளபதிகள், குறுநில மன்னர்கள், நிலவுடமையாளர்கள் என அதிகாரம் பல மட்டங்களிலும் செயல்பட்டாலும், மன்னர் அனைவர் அதிகாரத்தையும் அவர் நினைத்தால் பறித்துக்கொள்ள முடியும் என்பதால் எதேச்சதிகார, சர்வாதிகார சூழ்நிலைகள் எளிதில் தோன்றிவிடும். அப்படியான எதேச்சதிகார, சர்வாதிகார சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க உருவானதுதான் மக்களாட்சி அமைப்பு.
தேர்தல்கள், ஊடகங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளின் அவைகள், நீதிமன்றங்கள் எனப் பல்வேறு களங்களில் அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து விவாதிக்கப்படுவதும் ஆட்சி செய்பவர்கள் அவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவதும்தான் மக்களாட்சியின் சாராம்சம். இங்கே யாரும், எவ்வளவு தூரம் மக்களைச் கவர்ந்த தலைவராக இருந்தாலும், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்னகத்தே திரட்டிக்கொள்ள முடியாது. மக்களின் கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணிக்க முடியாது.
இந்தியா முழுவதும் மக்களைப் பெரிதும் ஈர்த்து “இந்திரா இந்தியாவே, இந்தியா இந்திராவே” என்று ஆராதிக்கப்பட்ட இந்திரா காந்தி பதினெட்டு மாதங்கள் நெருக்கடி நிலை அறிவித்து சர்வாதிகார சூழலை உருவாக்கினாலும், தேர்தலை அறிவித்தவுடன் 1977-ம் ஆண்டு படு தோல்வியைச் சந்தித்தார். அது இந்திய மக்களாட்சியின் ஆற்றலைக் காட்டியது. சமீபத்தில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. அதிகாரக் குவிப்பு முயற்சிகளை மக்களாட்சி தடுத்து நிறுத்தியுள்ளது எனலாம்.
மக்களாட்சி லட்சியத்தின் அதிகாரப் பரவலின் மிக முக்கியமான பரிமாணம்தான் மாநில சுயாட்சி என்பதாகும். ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது மக்களாட்சிக்கு எதிரானது என்பதுடன் காலப்போக்கில் மாநில மக்கள் அன்னியமாவதற்கும், பிரிவினை எண்ணம் தோன்றுவதற்கும் வழி வகுத்துவிடும். எனவே, உண்மையான தேச பக்தி என்பது மக்களாட்சியின் அதிகாரப் பரவலை அனைத்து மட்டங்களில் வலியுறுத்துவதாகவே இருக்க வேண்டும். பாஜக குடும்ப அரசியல் வாரிசு என்று பழிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் பணி அதுவாகவே இருக்கிறது.
முரணரசியலும், அரசியல் கட்சிகளும்
மக்களாட்சி அரசியலமைப்பை மானுடம் கடந்த நானூறு, ஐந்நூறு ஆண்டுகளில் சிறுகச் சிறுக உருவாக்கியிருந்தாலும், சமூக உறவுகளில் பல்வேறு முரண்கள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். பொருளாதார அளவில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது. முதலீட்டு திரட்சியினை முன்னெடுக்கும் முதலாளிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பன போன்ற பிரிவினர் அதிகாரமிக்கவர்களாகவும், விவசாயிகள், தொழிலாளிகள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் எனப்படுபவர்கள் அவர்களை சார்ந்து வாழ்பவர்களாகும் இருக்கும்போது அவர்களிடையே வர்க்க முரண்கள் ஏற்படும்.
இதைத்தவிர சமூக, பண்பாட்டு தளங்களிலும் மக்கள் குழுக்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் அதிகாரப் போட்டிகளும் ஏற்படும். மனித உறவுகள் எல்லாவற்றிலுமே தொடர்ந்து அதிகாரக் குவிப்பும், அதனை கைப்பற்றுவதற்கும் அல்லது பகிர்வதற்கான போட்டிகளும் நிலவி வருவது இயல்பானதாகும். ஏனெனில், பொது முடிவுகளை எடுப்பது என்பது எந்த கூட்டு நடவடிக்கையிலும் இன்றியமையாதது என்பதால் அந்த முடிவை யார் எடுப்பது என்பதில்தான் அதிகாரம் செயல்படத் துவங்கும். ஆதிவாசி குழுக்களிலிருந்து, அனைத்து மனித சமூகங்களிலும் இதனால் முரண்கள் செயல்பட்ட வண்ணமே இருக்கும்.
இப்படியான முரண்கள் நிறைந்த சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசமைத்து அனைவருக்கும் பொதுவான சட்டத்தின் ஆட்சியையும், மக்களாட்சியையும் செயல்படுத்த வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான பணியாகும். நிலையான ஆட்சியைத் தர முடியாது. அதனால்தான் முரண்கள் நிறைந்த சமூகத்தையும், அனைவருக்குமான அரசியலமைப்பையும் இணைப்பதற்கு அரசியல் கட்சிகள் இன்றியமையாதவை ஆகின்றன.
அரசியல் கட்சிகள் சமூக முரண்களில் ஒரு தரப்பின் பிரதிநிதிகளாலோ அல்லது அனைத்து தரப்புகளின் பிரதிநிதிகளாலோ உருவாக்கப்படுகின்றன. அதே சமயம் அவை பொதுவான லட்சியங்கள், பொது நன்மை ஆகியவற்றுக்காகவும் இயங்க வேண்டியவையாக உள்ளன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் இல்லாமல் மக்களாட்சி என்பது சாத்தியமேயில்லை எனலாம்.
அரசியல் கட்சிகளின் தொடர்ச்சி எப்படிச் சாத்தியமாகும்?
அரசியல் கட்சிகள் முதலில் கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றில் தொடர்ச்சியை கொண்டிருக்க வேண்டும். சமூக முரண்களை நிர்வகிப்பது எப்படி என்பதன் அடிப்படையிலேயே அந்தக் கோட்பாடுகள், கொள்கைகள் அமையும். அந்தக் கொள்கைகளை ஏற்பவர்கள் தொடர்ந்து அந்தக் கட்சியை ஆதரிப்பார்கள்.
கட்சி அமைப்புகள் வலுவாக சமூகத்தின் பல தளங்களிலும் வேரூன்ற வேண்டும். கிராமங்கள், சிறு நகரங்கள், பெரு நகரங்கள் அனைத்திலும் கட்சிக்கான கிளைகள் அமைக்கப்பட்டு அவை சமூகத்தில் அன்றாடம் உருவாகும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூக வாழ்வை மேம்படுத்தவும் இயங்க வேண்டும்.
பல்வேறு முரண்பட்ட சமூகத் தொகுதிகளை கொள்கை அடிப்படையில் அணி சேர்க்க வேண்டுமென்றால் அதற்கு அனைவரும் ஏற்கும் வலுவான தலைமை வேண்டும். தலைமை என்பது கருத்தொப்புமையின் வடிவம். இந்தத் தலைமையில் இடையறாத தொடர்ச்சி நிலவினால்தான் கட்சி பிளவுபடாமல் இருக்கும்.
சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினரை நிறுத்தி வெறுப்பரசியல் செய்தால் கட்சியை ஒருங்கிணைப்பது சுலபம். அவ்விதம் செய்யாமல் சமூக நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, சமூக முரண்களையும் சமரசப்படுத்தும் வெகுஜன அரசியலைச் செய்யும்போது கட்சியை ஒருங்கிணைப்பதற்கு தலைமையில் வலுவான தொடர்ச்சி இருப்பது இன்றியமையாதது.
ஒரு சிறந்த தலைவரின் மகனோ, சகோதரரோ, வேறு ஓர் உறவினரோ அவரது பண்புகளை, செயல் நுட்பங்களைக் கண்டுணர்ந்து கொள்கைகளை, விழுமியங்களை, லட்சியங்களை பின்பற்றும்போது அவரும் தலைமைப் பண்புக்கு தயாராவது சாத்தியமாகிறது. கட்சியினருக்கும், மக்களுக்கும்கூட தலைமையின் தொடர்ச்சியைக் கடத்துவது, கட்சியினைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது சாத்தியமாகிறது.
உதாரணமாக, கியூபாவின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலிவுற்றபோது. அவர் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ தலைமைப் பொறுப்பேற்றார். அவரும் கியூபப் புரட்சியிலிருந்தே உடன் பயணித்தவர் என்பதால் குடும்ப உறுப்பினராக இருப்பது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸில் சுதந்திரத்திற்கு முன் ஆண்டுதோறும் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதுபோல 1928-ம் ஆண்டு தலைவராக இருந்த மோதிலால் நேருவினை அடுத்து, 1929-ம் ஆண்டு நாற்பது வயது நிரம்பிய அவர் மகன் ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இளம் தலைமுறை பொறுப்பேற்பதாகவே கருதப்பட்டது. காந்தி ஜவஹர்லால் நேருவின் தேர்வை முழுமையாக ஆதரித்ததுடன், அவரை தன்னுடைய அரசியல் வாரிசென்றே கூறினார்.
இத்தகைய முழுமையான வரலாற்றுப் பின்னணியை கணக்கில்கொண்டால் அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியும், அவற்றின் வலுவான கட்டமைப்பும் மக்களாட்சிக்கு இன்றியமையாதது என உணரலாம். அப்படி ஒரு கட்டமைப்பு தொடர எத்தகைய தலைமை கட்சிகளுக்கு உதவுகிறதோ அதுவே மக்களாட்சிக்கும் நல்லது. ஏனெனில் கட்சி தலைவர்களிடம் அதிகாரம் குவிய முடியாது. அவர்கள் கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற முடியும். அப்படி வெற்றி பெறும்போது அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் அவர்களிடம் அதிகாரம் குவியாமல் அரசியலமைப்பு சட்டமும், மக்களாட்சி நியதிகளும் பார்த்துக் கொள்ளும்.
கட்சி அணியினரின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ள அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்கி அவரது தலைமைப் பண்பையும் அதன் மூலம் இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து கட்சியையும் வலுப்படுத்துவதும், மாநில சுயாட்சி என்ற லட்சியத்தை நோக்கி பயணிப்பதும் ஆகிய இரண்டுமே மக்களாட்சி விழுமியங்கள் சார்ந்ததே என்பதனை புரிந்துகொள்வது பாரபட்சமற்ற பார்வையில் கடினமானது அல்ல.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை அமைத்த அறிஞர் அண்ணா
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!
உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!
சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!