வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடக்க இருக்கும் அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடக்க இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் உயர் நிலை செயல் திட்டக் குழு என்பது மிக முக்கியமானது. அதாவது திமுகவின் செயல் திட்டங்களை, அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கான விதை போடப்படுவது உயர் நிலைக் குழுக் கூட்டத்தில்தான். வருடத்தில் ஓரிருமுறை அரிதாகவே இந்தக் கூட்டம் நடக்கும்.
வருகிற 20 ஆம் தேதி நடக்க இருக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது…
‘2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் என நியமிக்கப்பட்டு கட்சி சீரமைப்பு பணிகளும் தேர்தல் பணிகளும் வேகவேகமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், திமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களும் விரைவில் நடக்க இருக்கின்றன. கடந்த 2022 அக்டோபரில் கடைசியாக திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்போது திமுகவின் மாவட்ட செயலாளர்களில் கணிசமான இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று உதயநிதி விரும்புகிறார். விஜய் உள்ளிட்ட புதிய சக்திகள் எதிர் அணியில் வந்து நிற்கும் போது, திமுக கட்டமைப்பு ரீதியாக தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று உதயநிதி கருதுகிறார்.
அந்த வகையில் மிக மூத்த மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக இளைஞர் அணியில் இருந்து கணிசமான மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பட்டியலை ஏற்கனவே முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் உதயநிதி அளித்திருக்கிறார்.
அமைச்சர் எ.வ.வேலுவின், ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை பற்றி பேசினார். அதற்கு துரைமுருகன் கடுமையாக பதிலடி கொடுத்தார். ரஜினி – துரைமுருகன் சர்ச்சையின்போது, திமுகவில் மூத்தவர்கள் வழிவிட்டு இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்று உதயநிதி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.
தேர்தலுக்கு முன், மிக நெருக்கமான காலகட்டத்தில் மாவட்ட செயலாளர்களை மாற்றுவதை விட சற்று முன்பே மாற்றி அமைக்க வேண்டும் என்பதிலும் உதயநிதி தீவிரமாக இருக்கிறார். இந்த மாற்றங்கள் பற்றிய ஆலோசனை உயர்நிலை செயல்திட்ட குழுவில் நடக்கலாம் என்கிறார்கள்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன அஜண்டாக்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதையும் உயர்நிலை செயல்திட்ட குழுவில் முடிவு செய்வார்கள். எனவே வருகிற 20 ஆம் தேதி நடக்க இருக்கிற திமுகவின் உயர் நிலைக் குழுக் கூட்டம், அதன்பின் நடக்க இருக்கிற செயற்குழு, பொதுக் குழு கூட்டங்கள்… 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவை தயார்ப்படுத்தும் ‘உதயநிதியின் உத்தி’ யை செயல் திட்டமாக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘சீக்கிரம் குணமாயிருவீங்க’… டாக்டர் பாலாஜியிடம் போன் பேசிய ஸ்டாலின்
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையா? – கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்!