அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை அதிமுகவால் தான் செயல்படுத்த முடியும் என்றும், பிறரால் அதனை செயல்படுத்த முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது பேசிய அவர், ”அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரன் இன்பநிதி கலந்து கொண்டது விதியை மீறிய செயல். திமுக குடும்ப நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறது.
கோவையில் செம்மொழி மாநாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பின் வரிசையில் தள்ளப்பட்டு முன் வரிசையில் அப்போது முதலமைச்சரான கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்தனர். தமிழ் அறிஞர்களை திமுக எப்போதும் மதித்ததில்லை.
திமுகவினர் முப்பெரும் விழா என கூறிவிட்டு பெரியார், அண்ணா ஆகியோரின் படங்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இத்தகைய படங்களை தவிர்த்து விட்டு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் படங்களை தான் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர்.
ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் பொழுதுபோக்குக்காக கொடநாடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சொல்லுகிறபடி அவர்கள் ஆடி வருகின்றனர்.
அதிமுகவை பொருத்தவரை மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. எனவே யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை.
டிடிவி, ஓபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது மண் குதிரை போன்றது தான். ஏற்கனவே அவருடன் கூட்டணி சேர்ந்தவர்கள் கரையேறாத நிலையில் உள்ளனர். அவர்களின் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி போல் தான். அது மூன்று அடி கூட தாண்டாது.
ஊழலை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. சர்க்காரியா கமிஷன் முதல் கொண்டே சர்க்கரை ஊழல், வீராணம் ஏரி குழாய் ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்தது திமுக ஆட்சிதான். நாட்டிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டதும் திமுக ஆட்சி தான்.
இத்தகைய ஊழல்களை எல்லாம் அறிக்கையாக தயார் செய்து அதனை ஆளுநரிடம் புகார் அளித்தவர் மறைந்த அதிமுக தலைவர் எம்ஜிஆர். அதிமுக ஊழலை வெளிக்கொண்டு வர தயங்காது.” என்றார்.
5 ரூபாய் முத்துசாமி…
அப்போது கூட்டணி கட்சி தலைவரான அண்ணாமலையின் பாதயாத்திரையும், அமித் ஷாவின் பேச்சு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்றும் தவறு இல்லை.
அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்கள் செய்த நலத்திட்டங்களை அதிமுகவினர் தான் செய்ய முடியும். பிறர் அந்த சாதனையை செய்ய முடியாது.
டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு உள்ள நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது முத்துசாமி அமைச்சராக இருக்கும்போது பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கப்படுகிறது. 5 ரூபாய் முத்துசாமி என்ற பெயர் அவருக்கு தேவையா?
அரசின் வருவாயை பெருக்குவதற்காக அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் குழுவின் அறிக்கை எங்கே? அரசு அதனை வெளியிட வேண்டும். சொத்து வரி மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி மக்களிடமிருந்து பல்வேறு வகைகளில் வரியை வசூல் செய்து அவர்களை மிகவும் பாதிப்படைய கூடிய செயலை திமுக அரசு செய்து வருகிறது” என்று ஜெயக்குமார் பேசினார்.
திமுக அரசு டிஸ்மிஸ் ஆகலாம்!
இறுதியாக, ”தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம் கொடுக்க முடியாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜிக்கு கோப்புகள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புகிற பட்சத்தில் சிறையில் அவர் இருப்பதால் அவருக்கு அனுப்பப்பட்ட கோப்புகளின் பிறர் பார்வையிட கூடும். அப்போது அரசின் ரகசியத்தை காக்க தவறிவிட்டதால் 356 வது பிரிவு பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட கூடும்.” என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சருக்கு என்ன துறையின் கோப்புகள் என்று கேள்வி எழுப்பியபடியே அங்கிருந்து பத்திரிகையாளர்கள் கலைந்து சென்றனர்.
மணிப்பூர் விவகாரம்: விதி 267-க்கு பதிலாக 176 கொண்டு வரும் பாஜக… எதிர்க்கட்சிகள் அமளி!
தென் மாவட்ட அரசியல் படத்தில் செல்வராகவன்