சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 13) தொடங்கி வைத்தார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த 10ம் தேதி இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கொசுவலை வழங்கும் திட்டம்!
மேலும் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு நீர்நிலைப் பகுதியோரம் வசிக்கும் மக்களுக்கு 2.5 லட்சம் கொசுவலைகள் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 20 ஆயிரம் பேருக்கு கொசுவலைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னை ஓட்டேரியில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நீர்நிலைப் பகுதியோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது தேங்கிய தண்ணீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டீபன்சன் சாலை, 70 அடி சாலை, பல்லவன் நகர், வீனஸ் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழியில் முதல்வர்!
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ”மழை பெய்யும் போது நீர் தேங்குகிறது. ஆனால் சிறிது நேரத்தில் வடிந்து விடுகிறது. எதிர்க்கட்சி விமர்சனம் பற்றி கவலையில்லை. மக்கள் பாராட்டினால் போதும்.
எவ்வளவு பெரிய கனமழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மழையால் எந்த ஆபத்தும் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை. அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. என்று கூறினார்.
மேலும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை நாளை நேரில் சென்று பார்வையிட போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு”: எச்சரிக்கும் வெதர்மேன்!
T20 WorldCup Final : உலகக் கோப்பையை கைப்பற்ற போவது யார்?