”விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது”: கடம்பூர் ராஜூ

Published On:

| By christopher

 

நடிகர் விஜய்யை கண்டு திமுக அரசு பயப்படுவதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜூ கூறியதாவது, ”நடிகர் விஜய்யை கண்டு திமுக அரசு பயப்படுகிறது. நடிகர்களிடம் அரசு எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்கக்கூடாது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நான் திரைத்துறையின் அமைச்சராக இருந்தேன் என்ற முறையில் கூறுகிறேன். எங்களது ஆட்சிக்காலத்தில் நாங்கள் நடிகர்களிடம் எந்த பாரபட்சமும் காட்டவில்லை.

தற்போது திரைத்துறையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கம் உள்ளது. 2006 முதல் 2011வரை காலத்திலும் இதே போன்ற ஒரு நிலை தான் இருந்தது. இப்படி தான் திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி இருந்தது.

பின்னர் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படையான நிர்வாகம் காரணமாக திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது.

தற்போது 200 திரைப்படங்களை வெளியிட முடியாத நிலையில் தமிழ் சினிமா உள்ளது. திரைத்துறையே முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்களே கூறுகிறார்கள். இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிசின் ஆதிக்கம் தான். அதனுடைய உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக இருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின்‌ பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அரசு மற்றும் காவல் துறை அனுமதி தரவில்லை. ஆனால் சன்பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தார்கள்.

தற்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். பாரபட்சமாக செயல்படுவது திரைத்துறைக்கு நல்லது கிடையாது‌. திரைத்துறை என்பது சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் அப்படி செயல்பட மாட்டார்கள் என்பது எங்களுடைய கருத்து” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

GVM-ஐ கலாய்த்த பார்த்திபன்.. வைரலாகும் ட்விட்…!

“விடாமுயற்சி” கலை இயக்குனர் மறைவு: சோகத்தில் படக்குழு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share