டிஜிட்டல் திண்ணை: கோட்டையின்  ‘மாமன்னன்’ உதயநிதி; குழப்பத்தில் அதிகாரிகள்! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  மாமன்னன் படம் பற்றிய பல்வேறு அரசியல் தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்  கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் உதயநிதி நடித்த பாத்திரத்தின் பெயர் அதிவீரன். 

“சினிமாவில்தான் உதயநிதி அதிவீரன். ஆனால்  அரசியலில் குறிப்பாக திமுக அரசில் உதயநிதியே மன்னன் ஸ்டாலினை மிஞ்சும் மாமன்னனாக ஆகிக் கொண்டிருக்கிறார்” என்கிற குரல்கள் கோட்டை அரசியல் வட்டாரத்திலும், அதிகார வட்டாரத்திலும் கேட்கிறது.

2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்த நிலையில் உதயநிதி உடனடியாக அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவே தொடர்ந்தார். இந்நிலையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்புகள் மீண்டும் எகிறிய நிலையில்…   2022 டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சர் ஆனார் உதயநிதி. அதன் பிறகு மெல்ல மெல்ல திமுக அரசில் உதயநிதியின் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. 

இப்போது  ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் ஏழெட்டு சீனியர் அமைச்சர்களைத் தவிர அனைத்து அமைச்சர்களும் உதயநிதியுடன் தான்  முழுமையான தொடர்பில் இருக்கிறார்கள்.  அடிக்கடி உதயநிதியை சந்தித்து தங்கள் துறை ரீதியாக மட்டுமல்லாமல்… தங்களது மாவட்டத்தின் அரசியல் நிலவரத்தையும் உதயநிதியிடம் ரிப்போர்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் பற்றியும் உதயநிதியிடம் கொண்டு செல்கிறார்கள். இதையெல்லாம் ஆர்வமாக கேட்டுக் கொள்கிறார் உதயநிதி.  இவ்வாறு அமைச்சரவையின் பெரும்பான்மையான அமைச்சர்களை தன் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி, இப்போது  அதிகாரிகளையும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.   

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள்  இப்போது அமைச்சர் உதயநிதியை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கிறார்கள்.  அவர்களுக்கு  முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார் உதயநிதி. அதுவும் தனது அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு அழைத்து உயரதிகாரிகளை சந்திக்கிறார் உதயநிதி.  அதுமட்டுமல்ல… அண்மையில் நடந்த உயரதிகாரிகள் இடமாற்றம் கூட உதயநிதியின் ஆலோசனைப்படியே  செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் கோட்டையில்.

உதயநிதியின் இந்த திடீர் உயர்வு குறித்து சில அதிகாரிகள்,   “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை குறிஞ்சி இல்லத்துக்கு அழைத்தார். பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டார். நாங்கள்  சொல்வதை பொறுமையாக காது கொடுத்துக் கேட்டுக் கொள்கிறார். கேட்பதோடு நின்றுவிடாமல்… நாங்கள் சொன்ன விஷயங்களை தேவையான நேரத்தில் தக்கபடி செயல்வடிவமும் கொடுக்கிறார்.   அவரது அணுகுமுறை புதியதாக இருக்கிறது.  எளிய மனிதராக மக்கள் பிரச்சினைகளை அணுகும் உதயநிதி அதேநேரம், தெரியாத விஷயங்கள் பற்றி விரிவாக கேட்டுத் தெரிந்துகொள்வதில் எந்த கூச்சமும் படுவதில்லை.  இந்த வகையில்  அதிகாரிகளுக்கும்  உதயநிதியுடனான சந்திப்பும் விவாதங்களும் புதிய அனுபவமாக இருக்கிறது” என்று பாராட்டுகிறார்கள்.

கோட்டையின் இன்னொரு வட்டாரமோ, ‘அட போங்க சார்…’ என்ற அங்கலாய்த்தபடியே ஆரம்பிக்கிறார்கள்.

 “கடந்த இரு மாதங்களுக்கு மேலாகவே தன்னுடன் ஆலோசனை நடத்த வரும் உயர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின், ‘தம்பிக்கிட்டயும் ரெகுலரா பேசிக்கிட்டிருங்க’ என்று சொல்லி வந்திருக்கிறார். அதன்படியே  உயரதிகாரிகள் உதயநிதியை சந்திக்க தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் உயரதிகாரிகளை பசுமை வழி சாலையில் இருக்கும் தனது குறிஞ்சி இல்லத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார் உதயநிதி.

முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.சிடமும், ‘தம்பிகிட்டயும் பேசிடுங்க’ என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதைக் கேட்டு சற்றே நெருடலான  உதயசந்திரன் தனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்தார். எனவே முதல்வரையே சந்தித்து, ‘என்னை வேறு துறைக்கு மாற்றிவிடுங்கள்’ எனக் கேட்டு நிதித்துறை செயலாளராக மாறிச் சென்றுவிட்டார்.

இந்த ஆட்சியின் இரு பலங்களாக கருதப்பட்டவர்கள் உதயசந்திரனும், உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும். இப்போது டேவிட்சனும் தலைமையிடத்து ஏடிஜிபியாக நிர்வாக பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அவர் டம்மி ஆக்கப்பட்டுவிட்டார் என்று வெளியே செய்திகள் வருகின்றன.போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தான் அவர் மீது இந்த நடவடிக்கை என்று பாஜகவினர் சமூக தளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் உதயநிதியின் இந்த திடீர் எலிவேஷனுக்கு இடையில்  தானாகவே மாறியிருக்கிறார் டேவிட்சன் என்பதுதான் உண்மை.

உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சனிடமும் முதல்வர் ஸ்டாலின், ‘தம்பிக்கிட்டையும் பேசிக்கங்க’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.  ஒவ்வொரு நாளும் முதல்வரின் பார்வைக்கு மிக முக்கியமான உளவுத் தகவல்களை கொண்டு செல்ல வேண்டியது உளவுத்துறை ஏடிஜிபியின் கடமை. அதை முதல்வரிடம் மட்டுமே தெரிவித்து வந்தார் டேவிட்சன். இதற்கிடையே உதயநிதியே டேவிட்சன் தேவாசீர்வாதத்தை  குறிஞ்சி இல்லத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதோடு அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் அடுத்து என்ன செய்யப் போகிறது, எந்தெந்த அமைச்சர்களை குறிவைத்திருக்கிறது என்பன உள்ளிட்ட ரிப்போர்ட்டுகளை எல்லாம் கேட்டிருக்கிறார் உதயநிதி.

உதயசந்திரன் போலவே இது தனக்கு சரிப்பட்டு வராது என்று நினைத்த டேவிட்சன் தான்  வேறு பணிக்கு மாற விரும்புவதை  முதல்வரிடமே தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகுதான் ட்விஸ்ட் காத்திருந்தது. அவரை ரயில்வே ஏடிஜிபியாக நியமித்து டம்மியாக்க முடிவு செய்திருந்தார்கள். இதை அறிந்த உதயசந்திரன் தனது பழைய செல்வாக்கை வைத்து தலையிட்டு பேசி டேவிட்சனுக்கு தலைமையிடத்து ஏடிஜிபி பதவியை பெற்றுக் கொடுத்து அவரது கௌரவத்தை கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறார். 

உயரதிகாரிகளை இப்படி உதயநிதி குறிஞ்சி இல்லத்துக்கே நேரடியாக அழைத்து கட்டளைகள் பிறப்பிப்பது  சில சீனியர் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் சீனியர்கள் பலர் இது சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கோட்டை வட்டாரத்தினர் தொடர்ந்தனர்.

 “உயரதிகாரிகளிடம் கட்டளையிடுவது மட்டுமல்ல… அரசின் முக்கிய அதிகாரிகளை நியமிப்பதிலும் உதயநிதியின் கொடியே பறக்கிறது. அதிலும் அதிகாரிகள் மத்தியில்  அதிருப்தி நிலவுகிறது.

உதாரணத்துக்கு தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். 1997 பேட்ச்சை சேர்ந்தவர். அதேநேரம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சியின் கமிஷனராக இருப்பவர்  ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், இவர் 1992 பேட்ச்சை சேர்ந்தவர்.  ஐந்து வருடங்கள் சீனியரான ராதாகிருஷ்ணன் தனது  ஜூனியரான கார்த்திகேயனின் கீழ் பணி செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, ஜெ.ராதாகிருஷ்ணன் இப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்.  அவரது துறைக்கு தலைமை வகிக்கும் கார்த்திகேயனோ முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர். இது எப்படி சரியாகும் என்று  அதிகாரிகள் மத்தியில்  சலசலப்பாகியிருக்கிறது.

அதேபோல அண்மையில் நடந்த மாற்றங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளே அதிகமாக இடம் பிடித்திருக்கிறார்கள் என்ற குமுறல் வன்னியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் உதயநிதிக்கான சில முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருகிறது. 

உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் முழுமையான அதிகாரத்தை கொடுக்க முடிவு செய்து அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார். அதே நேரம் உதயநிதி நிர்வாக நடைமுறைகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படுத்த வேண்டும். சீனியர் அதிகாரிகள் உதயநிதியின் அணுகுமுறையால் தங்களைத் தாங்களே தள்ளி வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அனுபவத்தையும் ஆற்றலையும் தமிழ்நாடு அரசுக்கு உதயநிதி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்ற வேண்டுகோளையும் இந்த குமுறலுடனே முன் வைக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

திமுக எம்.பி ஞானதிரவியம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

+1
0
+1
3
+1
1
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *