சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடி ஏற்றினார்.
பின்னர் பேசிய அவர், ”தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு – பேரறிஞர் அண்ணா தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகுதான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. ‘ஒரே ஒரு சங்கரலிங்கனார் தான் செத்துப் போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் தமிழ்நாடு என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் தமிழினத்தலைவர் கலைஞர்.
எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?’ என்று கேட்டவர் தந்தை பெரியார்.
இத்தகைய பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன்.
கடந்த ஆண்டு இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். இந்த ஆண்டு நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். கலைஞரின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டையில் நின்று கொடியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள் அனைவருக்கும் விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்து மாநில சுயாட்சிக் கொடியைக் காத்த தலைவர்தான் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது தமிழை – தமிழ்நாட்டைக் கொண்டாடுவது ஆகும் என்ற அடிப்படையில் அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தொழில் வளர்ச்சி , சமூக மாற்றம் , கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் – கல்வி , சமூகம் , சிந்தனை , செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும்,பேரறிஞர்அண்ணாவும் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி.
கடந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால் ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.
மாணவ மாணவிகளின் அறிவுத் திறனை மேம்படுத்த, ‘நான் முதல்வன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டத்தின்கீழ்கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் 3.5 இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில்அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இன்னொரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறோம்.
தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும்வகையில், சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறன் மேம்பாடுசெய்யவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன். ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வண்ணம், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியாக, பலனடையும் ஆட்சியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு அனைத்து வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.” என கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு ”தகைசால் தமிழர்” விருதை வழங்கினார் முதல்வர்!
“குடும்ப அரசியல் நாட்டை சீரழித்துவிட்டது” – பிரதமர் மோடி
சாதி வாழ்க்கை: தமிழ்க்குடிமகன் ட்ரெய்லர் சொல்ல வருவது என்ன?