செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் குடும்ப ஆதிக்கம் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாலை முரசு பத்திரிகையின் உரிமையாளர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 11) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் போதைப் பொருளை தடுப்பதில் திமுக அரசு, நூறு சதவிகிதம் தவறிவிட்டது. தினமும் பத்திரிகைகளை திறந்தாலே, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்திகள் தான் இருக்கின்றன.
அதிமுகவை ஒடுக்குவதிலும், அழிப்பதிலும் தான் தமிழக முதல்வர் சர்வாதிகாரியாக இருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இல்லை. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. காவிரியில் நீர் வரத்து அதிகமாக உள்ள போதும், முறையாக நீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் தான் அன்பில் மகேஷ்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தவில்லை. செம்மொழி மாநாட்டில் குடும்ப ஆதிக்கத்தை செலுத்தியதைப் போல செஸ் போட்டி நிகழ்ச்சியிலும் திமுகவின் குடும்ப ஆதிக்கம் தான் இருந்தது.
உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராக தான், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்படுகிறார். தமிழகத்தில் திமுகவினர் அதிகளவில் நிலத்தை அபகரிக்கிறார்கள் என்பதால் தான், நில அபகரிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த வருடம் பெய்த மழையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வெள்ளத்தில் மூழ்கியது. தன்னுடைய தொகுதியை வெள்ளத்தில் இருந்து காப்ப்பாற்ற முடியாத முதல்வரை தமிழ்நாட்டு மக்கள் பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது.
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. திமுக ஆட்சியில் காவல்துறை பரிதாபகரமான நிலைக்கு சென்றுவிட்டது. அமமுகவுடன் ஓபிஎஸ், சசிகலா இணைந்தால் நல்லது தான்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
செல்வம்
கருப்புச் சட்டை குறித்து மோடி: ப.சிதம்பரம் ஆவேச பதில்!