பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுகவின் நிர்வாகிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறது அக்கட்சியின் தலைமை. அதிலும் ஏகப்பட்ட அக்கப்போர்கள் நடந்திருக்கின்றன.
திமுக ஆட்சி அமைந்தாலும் திமுக தொண்டர்களுக்கும் கீழ் நிலை நிர்வாகிகளுக்கும் எவ்வித பயனும் இல்லை என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது.
இந்த புலம்பலோசை அதிகரித்த நிலையில்தான் கடந்த தீபாவளிக்கு முன்பு கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஊக்கத் தொகையை திமுக சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு வழங்கத் தொடங்கியது திமுக தலைமை.
முதன் முதலில் உட்கட்சித் தேர்தல் மூலம் தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக அதாவது கடந்த அக்டோபர் மாதம், ஸ்டாலின் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தினார். அதன்படி ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கு எல்லாம் தலா 2 லட்ச ரூபாய், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்களுக்கு அதாவது அமைச்சர் பதவியில் இல்லாத மாவட்டச் செயலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்டோபர் 7 ஆம் தேதி மின்னம்பலத்தில் திமுகவில் திடீர் அதிசயம்: பாயும் பணம்- இதோ பட்டியல் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மூன்று மாதம் கழித்து சரியாக பொங்கல் வந்திருக்கும் நிலையில், பொங்கலுக்கு முதல் நாளே ஜனவரி 14 ஆம் தேதியே அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் தொகை சென்று சேர்ந்துவிட்டது.
நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள், “இது தலைமை கொடுக்கும் பணம் அல்ல. டாஸ்மாக் பார்கள் நடத்தி அள்ளிக் கொள்ளலாம் என்று கனவு கண்ட ஒன்றிய செயலாலர்களுக்கெல்லாம், இப்போது நடைமுறையில் இருக்கும் ‘வேற லெவல் டாஸ்மாக்’ பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. கட்சிக்காரங்க யாருக்கும் பார் கிடையாது. தமிழ்நாடு பூராவும் பார் எல்லாமே ஒரே நெட்வொர்க்கால் நடத்தப்படுது. இதுபோல சரித்திரம் திமுகவுலயும் கெடையாது, டாஸ்மாக்லயும் கெடையாது’ என்று திமுகவினர் வெளிப்படையாகவே புலம்பினார்கள். இந்த நிலையில்தான் டாஸ்மாக் பார் விவகாரங்களில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் தலையிடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு ஒருங்கிணைந்த டாஸ்மாக் வசூலில் இருந்து பிரித்துக் கொடுக்கப்படும் பணம் தான் இது.
இப்படிப்பட்ட டெலிவரி கடந்த அக்டோபரில் தொடங்கியது. அதன் அடுத்த கட்டமான பொங்கல் டெலிவரி ஜனவரி 13 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
ஒன்றிய துணைச் செயலாளர்கள் மூவர், மாவட்ட பிரதிநிதிகள் மூவர், ஒன்றியப் பொருளாளர், அவைத் தலைவர் என எட்டு நிர்வாகிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், கிளைச் செயலாளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
பணம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியின் பெயர் எழுதப்பட்ட கவரில் வைத்து ஒன்றிய செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டது,. ஒவ்வொரு கிளைச் செயலாளர் வரையிலும் இந்த கவர் நடைமுறை பின்பற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் கிளைச் செயலாளர்களுக்கு பணத்தை டெலிவரி செய்யும்போது வேறொரு சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறது” என்கிறார்கள்.
அதென்ன சுவாரயஸ்யம்?
”பொங்கல் பணத்தை டெலிவரி செய்யும்போதுதான் சில கிளைச் செயலாளர்கள் அதிமுக, பாஜக ஆகிய வேறு கட்சிகளுக்கு மாறியிருக்கும் விஷயமே ஒன்றிய செயலாளர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் சிரித்துக் கொண்டே பாஜகவினருக்கு போன கிளைச் செயலாளர்களுக்கும் திமுகவின் பொங்கல் பரிசுத் தொகையை தர்ம சங்கடத்தோடு அளித்திருக்கிறார்கள் ஒன்றிய செயலாளர்கள்” என்கின்றனர்.
இதுபற்றி நாம் சில ஒன்றிய செயலாளர்களிடம் பேசினோம்.
“உண்மைதான். தென் மாவட்டங்களில் பல மாவட்டங்களில் கிளைச் செயலாளர்களில் சுமார் 20% வரையிலும் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிட்டார்கள். கடந்த உட்கட்சித் தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள் தங்களுக்கு தேவையான மெஜாரிட்டி வைத்திருந்ததால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில கிளைச் செயலாளர்கள் உட்கட்சித் தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறியிருக்கிறார்கள். கிளைச் செயலாளர்களில் எத்தனை பேர் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனர், அவர்களுக்கு பதிலாக புதிய கிளைச் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை என்ற விவரம் கூட சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் இல்லை என்பதைத்தான் இந்த பொங்கல் டெலிவரி காட்டியிருக்கிறது. தென் மாவட்டங்களில்தான் இது பரவலாக நடந்திருக்கிறது.
எனவே கட்சி மாறிய அல்லது டிஆக்டிவ் மோடுக்குப் போன கிளைச் செயலாளர்களுக்கு பதில் புதிய கிளைச் செயலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் அவசரம் ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அதிமுக, பாஜகவுக்குப் போனவர்களுக்கும் இப்படி திமுக ரொக்கப் பரிசு கொடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கும்” என்கிறார்கள்.
–ஆரா