டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் -துரைமுருகன்: இடையில் என்ன நடக்கிறது?

அரசியல்

அலுவலகத்துக்குள் வந்ததும் செம்புலப் பெயல் நீர் போல செல்லுடன் வைஃபை கலந்தது. பிரபல வாரமிருமுறை இதழில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியின் பக்கங்களை அனுப்பிய நண்பர், சில வாரங்கள் முன்பு நாம் பேசியிருந்த விஷயங்களை துரைமுருகன் உடைத்திருக்கிறார் பாருங்கள் என்று குறிப்பிட்டார். அவருக்கு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பிவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனும் திமுகவின் தலைவரான முதல்வர் ஸ்டாலினும் மேடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் இந்த இருவருக்கும் இடையில் பிரச்சினை என்று சொல்பவர்களைப் பார்த்து பைத்தியம் என்றுதான் பலரும் சொல்வார்கள்.

ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு சில நாட்கள் வரை கூட ஸ்டாலினும் துரைமுருகனும் பேசிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அறிவாலய வேவ் லெங்த்தை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பின் பொதுக்குழு கூட கொரோனா ஊரடங்கால் தாமதம் ஆனது. அப்போது பொருளாளராக இருந்த துரைமுருகன்தான் அடுத்த பொதுச் செயலாளர் என பேசப்பட்டது. அதை ஒட்டி பொருளாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார் துரைமுருகன். ஆனால் பொதுக்குழு கூட்டுவது மேலும் தாமதமானது. இடையில் மீண்டும் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைமுருகன், அப்போது தனது ஏலகிரி கெஸ்ட் ஹவுஸில் தன்னை சந்திக்கும் திமுக நிர்வாகிகளிடமெல்லாம் ஸ்டாலினைப் பற்றிக் குறிப்பிட்டே புலம்பினார்.

‘ஒன்றிணைவோம் வா கூட்டம் காணொலியில நடத்துறாரு… மாசெக்கள் கூட்டம் சூம்ல நடத்துறாரு. அதே மாதிரி பொதுக் குழுவையும் நடத்த வேண்டியதுதானே… கலைஞர் என்னை சோதிப்பாரு, தண்டனை கொடுப்பாரு, அப்புறம் கூப்பிட்டு அரவணைச்சுப்பாரு. ஆனா ஸ்டாலின் அப்படியில்ல… இவரு என்னை அவமதிக்கிறாரு அவமானப்படுத்துறாரு’ என்றெல்லாம் துரைமுருகன் திமுக முக்கியஸ்தர்களிடம் புலம்பினார்.

இந்தத் தகவல் எல்லாம் தன் கவனத்துக்கு வந்ததும்தான் பொதுக்குழுவை காணொலியிலேயே கூட்டி ஒருவழியாக துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்கினார் ஸ்டாலின். ஆனால் பொதுச் செயலாளரின் பல அதிகாரங்களை தலைவர் பதவிக்கு மாற்றம் செய்யும் வகையில் விதிகள் திருத்தப்பட்டிருந்தன. இதனால் அலங்கார பதவியாக ஆனது பொதுச் செயலாளர். 

அதன்பின்  திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைத்ததும் தனக்கு பழையபடி வளமான பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை தருவார் என்று எதிர்பார்த்தார் துரைமுருகன். ஆனால் ஸ்டாலினோ பொதுப்பணித்துறையை எ.வ. வேலுவிடம் கொடுத்துவிட்டு, நீர்ப் பாசனத் துறையை மட்டும் பிரித்து துரைமுருகனுக்குக் கொடுத்தார். இதனால் அப்செட் ஆன துரைமுருகன் நேரடியாக ஸ்டாலினை சென்று பார்த்து, ‘இந்த துறை எனக்கு வேண்டாம். முன்னர் நான் வைத்திருந்த கனிமவள சுரங்கத் துறையையாவது கொடுங்க’ என கேட்டு வாங்கினார். 

அதன்பின் வேலூர் மாவட்டத்தில் தன் மகன் கதிர் ஆனந்துக்கு ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது மாநில அளவில் ஒரு பதவி வாங்கி விடுவது என்று குடும்பத்தோடு சென்று ஸ்டாலினை சந்தித்தார். ஆனால் ஸ்டாலின் இந்த கோரிக்கையை இன்று வரை நிறைவேற்றவில்லை.

இப்படியாக கட்சி அளவிலும் ஆட்சி அளவிலும் கலைஞர் காலத்தை விட தான் புறக்கணிக்கப்பட்டு வருவதை தன்னைச் சந்திக்கும் திமுக பிரமுகர்களிடம் எல்லாம் நக்கலாகவும் உருக்கமாகவும் பல முறை பகிர்ந்து கொண்டிருக்கிறார் துரைமுருகன். இதெல்லாம் ஸ்டாலினுக்கும் தெரியும். 

ஆனால் மேடைகளிலும், ஸ்டாலின் முன்னிலையிலும் அவர் பேசும்போது இதற்கு மேல் யாரும் பாராட்டிவிட முடியாது என்ற அளவுக்கு பாராட்டித் தள்ளி விடுவார் துரைமுருகன்.

சில நாட்களுக்கு முன் ஸ்டாலின், துரைமுருகன், மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து  பேசிக் கொண்டிருக்கும்போது,  ‘இந்த ஒரு வருஷத்துல இந்தியாவுலயே எந்த முதல்வரும் செய்யாத அளவு சாதனைகளை செஞ்சிருக்கீங்க. கலைஞரை நான் பக்கத்துல இருந்து பாத்திருக்கேன். அவருக்கு கூட டெல்லியிலேர்ந்து இவ்வளவு நெருக்கடியெல்லாம் இருந்ததில்லை. ஆனால் டெல்லி நெருக்கடியையும் மீறி இந்தியாவுலயே நம்பர் ஒன் முதல்வரா இருக்கீங்க. அடுத்த பிரதமர் இவர்தான்னு கை காட்டுற முதல்வர் இந்தியாவுலயே நீங்க மட்டும்தான்’ என்று ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

துரைமுருகன் அங்கிருந்து சென்றதும், ‘அண்ணனுக்கு என் மேல எவ்வளவு பாசம் பார்த்தீங்களா…’என உருகியிருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கான இந்த உறவு பற்றி அறிவாலய நிர்வாகிகளிடம் கேட்டால், ‘ரெண்டு பேரும் புகழ்ந்துக்குறதுலயும் குறைச்சல் இல்ல, உள்குத்துக்கும் குறைச்சல் இல்ல. யப்பப்பா’ என்கிறார்கள்”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

+1
1
+1
6
+1
0
+1
3
+1
1
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *