மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழகம் முழுதும் திமுக சார்பில் நூறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்றன.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி உரையாற்றினார்.
“தலைவர் கலைஞருக்கும் பேராசிரியருக்குமான நட்பு உறவு பற்றி கலைஞரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். அவர்களின் நட்பு இறுதி காலம் வரை தொடர்ந்தது. இந்த நட்பை என்னுடைய வாழ்க்கையிலே நான் பார்த்திருக்கிறேன். நம்மையெல்லாம் தொடர்ந்து மாற்றுக் கட்சியினர் இழிவுபடுத்திய 2ஜி வழக்கு.
அது தவிடு பொடி ஆக்கப்பட்ட தினம். கலைஞரிடம் நாங்கள் பெருமையோடு வந்து சொல்கிறோம். வழக்கிலிருந்து எல்லோருக்கும் விடுதலை கிடைத்து விட்டது. வழக்குப் பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்று கலைஞரிடம் சொல்கிறோம்.
அப்போது தலைவர் கலைஞர் கேட்ட முதல் கேள்வி, ‘பேராசிரியர் எங்கே அவர் கிட்ட சொல்லியாச்சா?’. வேறு எதுவும் கேட்கவில்லை.
அப்போது பேராசிரியர் அவர்கள் தலைவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். தலைவர் அழைக்கிறார் என்று அழைத்த போது முன்னால் வந்தார்.
இருவரும் ஒருவருடைய கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு அந்த கணத்தை அந்த வெற்றியை தள்ளாத வயதிலும் நாங்கள் இணைந்து பெற்ற வெற்றி என்று இணைத்துக் கொண்ட அந்த நிமிடம் அந்த நட்பு எப்படிப்பட்ட நட்பு” என்று குறிப்பிட்ட கனிமொழி அடுத்து ஆளுநர்கள் விவகாரத்துக்கு வந்தார்.
“எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் ஒரு கவர்னரை போட்டு விடுகிறார்கள். அந்த கவர்னர்கள், தான் ஒரு கவர்னர் என்பதை மறந்து விட்டு கட்சியில் இருப்பது மாதிரியும் ஆர்எஸ்எஸில் இருப்பது மாதிரியும் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை 1967 இல் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் இருந்த போது கூட இருந்திருக்கிறது. ” மாநில அரசுகளை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசு தன்னுடைய கட்சிக்காரர்களைப் போல மாநிலங்களில் கவர்னர்களை நியமிக்கிறது.
அதனால்தான் அவர்கள் குரைப்பதை கடிப்பதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் என்பவர் மக்களுக்கான பிரதிநிதி அல்ல. மக்கள் பிரதிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நான் கண்டிக்கிறேன்’ என்று நாடாளுமன்றத்தில் பேராசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒரு கவர்னர் இருக்கிறார். நாம் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று கேட்கிறோம். ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. பல பேருடைய வாழ்க்கையை அழிப்பதற்கு குடும்பங்களை அழிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நம்முடைய முதலமைச்சர் அதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றி அனுப்பினால்…
மாதக் கணக்கிலேயே அதை வைத்துக்கொண்டு, என்னென்ன வகையிலே இந்த அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை உருவாக்க முடியும்…
மாநில அரசு மக்களுக்கு நல்லது செய்வதை நாம் அனுமதித்து விடக்கூடாது என்பதற்காகவே ஒரு கவர்னரை நியமித்து அனுப்பி இருக்கிறார்கள்.
இதைத்தான் அன்றைக்கு நம்முடைய பேராசிரியர் அவர்கள் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த கவர்னர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று என்று நாம் நீண்ட நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அவர்கள் புரிந்து கொண்டிருந்தால் எந்த மாநிலத்திலும் கவர்னரால் இது போன்ற கஷ்டம், துன்பம் இருக்காது.
மக்கள் எதற்காக நம்மை தேர்ந்தெடுத்தார்களோ அந்த பணிகளை நமது முதல்வரும் அமைச்சர்களும் இன்னும் சிறப்பாக செய்து கொண்டிருக்க முடியும்” என்று பேசினார் கனிமொழி எம்பி.
–வேந்தன்
சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளை தளர்த்திய நீதிமன்றம்!