நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதத்தின் போது அனைவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவு போட்டிருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். திமுக வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து.
இதனால் திமுக எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும் என்று அரசியல் கட்சியினர், மாணவர்கள் எல பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனும், அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டனர்.
அப்போது ஜெகதீஸ்வரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி ஸ்டாலினிடம், “இன்னும் எத்தனை அனிதாக்கள், ஜெகதீஸ்வரன்கள் உயிரை கொடுக்க வேண்டும்” என்று அவரது நண்பர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, உண்ணாவிரத போராட்டம் தமிழகமெங்கும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
இந்த உண்ணாவிரத நிகழ்வின் ஏற்பாடு தொடர்பாக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி நேற்று ஜூம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் திமுகவினர், தோழமை இயக்கங்கள், மாணவர் அமைப்பினர், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய உதயநிதி சில கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.
அதாவது, “எல்லோரும் பொது இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறோம். இது சோஷியல் மீடியா காலம். எல்லோரது கைகளிலும் கேமராவுடன் செல்போன்கள் இருக்கிறது. நாம் சிறிதாக எதாவது செய்தாலும் அதை வீடியோ எடுத்து பரப்பிவிட்டுவிடுவார்கள்.
எனவே உண்ணாவிரதத்தின் போது எங்கேயும் சென்று எதுவும் சாப்பிடக் கூடாது. காலை 9 மணிக்கு உட்கார்ந்தால் மாலை 5 மணிக்குதான் எழுந்திருக்க வேண்டும். எல்லோரும் கட்டுப்பாட்டுடன் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வேண்டும். இயற்கை உபாதை கழிக்க மட்டும் எழுந்து செல்ல வேண்டுமே தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் எழுந்து போகக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
அதிமுக மாநாடா, திமுகவின் உண்ணாவிரத போராட்டமா என 20ஆம் தேதி தமிழக அரசியலில் இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கும் நிலையில், உதயநிதி இப்படி உத்தரவு போட்டுள்ளார்.
அதோடு என்ன விமர்சனம் வந்தாலும், என்ன கேலி செய்தாலும் நீட்டுக்கு எதிரான போராட்டம் தொடரும். நீட் விஷயத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
பிரியா
மோடி வடை… மேக்கின் இந்தியா ஊசி: அப்டேட் குமாரு
சென்னையில் ரூ.45 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது!
Comments are closed.