பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published On:

| By Selvam

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மெத்தனமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மாற்று கட்சி நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (அக்டோபர் 5) அதிமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஜூலை 11-ஆம் தேதி அதிமுக நடத்திய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில், பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை ஆணை பிறப்பிக்கவில்லை. நாங்கள் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மெத்தனமாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளை தான் திமுக அரசு திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது திமுக திறந்து வைக்கும் பாலங்கள், சாலைகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவமனைகள் இவை அனைத்தும் அதிமுக ஆட்சிக்காலத்தில் முடிவுற்ற பணிகள். அதனை தான் திமுக அரசு திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கமிஷன் அதிகமாக கேட்பதால், கோவை மாநகராட்சியில் சுமார் 48 ஆயிரம் கோடி மதிப்பில், 138 பணிகளுக்கு டெண்டர் விடும் பணிகளை 13 முறை ஒத்திவைத்துள்ளார்கள்.

தமிழக முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் வரை அனைத்து பணிகளும் முடங்கி போய் உள்ளது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். 2 ஆண்டு காலமாக கொரோனாவால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், திமுக அரசு மின் கட்டணத்தை 53 சதவிகிதம் உயர்த்தியுள்ளனர்.

சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தியுள்ளனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் அனுபவித்து வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொன்னார். இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து பேசவில்லை. காவிரி நதி நீர் பிரச்சனை வந்தபோது, அதிமுக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செல்வம்

கலைஞரின் கடல் பேனா:மத்திய அரசு எழுப்பும் கேள்விகள்!

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share