வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் பிரச்சார பொதுக்கூட்ட வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. DMK executives in connection with Nainar Nagenedran
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக கூட்டணியில் மொத்தம் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கொமதேக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. தவிர மீதி 18 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள்தான் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்றுள்ள ரிப்போர்ட்டில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத்தான் எதிர்க்கட்சிகள் குறிவைத்து வேலை செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்றாற்போல் திமுக தரப்பிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திமுக தரப்பிலும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது
குறிப்பாக திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ சின்னம் குறித்து தெரிவித்த கருத்துகள் திமுகவின் நிர்வாகிகள் மட்டுமல்ல… தொண்டர்களிடையேயும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் கடலூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவரோடும் உள்ளூர் திமுக வேட்பாளர்களுக்கு பெரிய அளவுக்கு ஈடுபாடில்லை. திருநெல்வேலி சிட்டிங் திமுக எம்.பி. ஞான திரவியம் இருந்தார்.
ஆனால் திமுகவில் ஞானதிரவியத்துக்கு எதிர்ப்பு, மாநகராட்சி விவகாரத்தில் கடுமையான கோஷ்டி மோதல் என்று பல பிரச்சினைகளால் தொகுதியை காங்கிரஸுக்கு தள்ளிவிட்டது திமுக தலைமை.
ஆனால் காங்கிரஸ் கட்சி, திருநெல்வேலிக்கு முதல்வர் பிரச்சாரம் வருவதற்கு சற்று நேரம் முன்புதான் வேட்பாளரையே அறிவித்தார்கள். அதுவும் ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால்…திமுகவினர் மத்தியில் இதுவே புகைச்சலாக இருந்தது. இப்படியென்றால் மயிலாடுதுறை தொகுதிக்கு திமுகவிடம் இருந்து, ‘நீங்க அறிவிக்கிறீங்களா… இல்லை நாங்களே அறிவிச்சுக்கட்டுமா?’ என்று மெசேஜ் அனுப்பிய பிறகே கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதாவை அவர் வன்னியர் என்ற ஒரே காரணத்துக்காக மயிலாடுதுறையில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.
இதற்கிடையில்தான் நேற்று திருநெல்வேலியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிக்கு பிரச்சாரம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பிரச்சாரத்துக்காக வந்தவர் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்களிடமும், பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
அப்போது, ‘கூட்டணிக் கட்சிகள் நிற்கும் தொகுதிகளைத்தான் நமது எதிர்க்கட்சிகள் குறிவைத்திருக்கின்றன. அதற்கு நமது கவனக் குறைவும் இடமளித்துவிடக் கூடாது. கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து நமக்கு ஒத்துழைப்பு கிடைக்கிறதோ இல்லையோ… அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டியது நமது நிர்வாகிகளின் கடமை.
அதனால் கூட்டணிக் கட்சிதானே… அதுபற்றி தலைமை பெரிதாக கருதாது என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லா தொகுதியும் நம் தொகுதியே… நமது 3 வருட ஆட்சிக்கான பரிட்சைதான் இந்தத் தேர்தல். இதில் நாற்பதுக்கு நாற்பது மார்க் வாங்க வேண்டும்’ என்று கூறியவர், அடுத்து கூறியதுதான் அதிர்ச்சியானது.
‘நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் நமது கட்சி நிர்வாகிகள் சிலரே கள்ளத் தொடர்பில் இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. உடனடியாக அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுங்கள். சாதி ரீதியாகவோ, வேறு ஆதாயத்துக்காகவோ நயினாருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் என்றும் என்னிடம் ரிப்போர்ட் இருக்கிறது. அவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதேபோல கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைச் சார்ந்த திமுக மாவட்ட நிர்வாகிகளிடத்திலும் திமுக வேட்பாளார் என்றே கருதி தேர்தல் பணியாற்றும்படியும் எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்” என்கிற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என் பொதுவாழ்வில் முதல் கைது இஸ்லாமியர்களுக்காகத்தான்…. -கதிர் ஆனந்துக்காக உதயநிதி பிரச்சாரம்!
மைக் சின்னம் : சீமான் கோரிக்கை நிராகரிப்பு!
DMK executives in connection with Nainar Nagenedran