2021 தேர்தலிலும் இதே இவிஎம் மெஷின் தான்… திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் வாதம்!

அரசியல்

முறைகேடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்திற்கு நடுவில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் இணைப்பதை தவிர்க்க வேண்டும் எனக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, “அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் இதுபோன்ற மனுக்கள் மீண்டும் மீண்டும் வாக்காளர்கள் மனதில் தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் சந்தேகிக்க தொடங்குவார்கள்.

1980- காலகட்டத்தில் இருந்து இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தை அணுகிய எவரும் இதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபிக்க முடியவில்லை.

திமுக வெற்றி பெற்ற கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் எம் 3 இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டன” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதிகள், “தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?” என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது இளங்கோ, “ரிட் மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் எங்கள் கவனத்திற்கு வந்தது.

இதுதொடர்பாக அண்மையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிட்டோம். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காததால், வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கல்வி கடன் தள்ளுபடி… ஜி.எஸ்.டி 2.0: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Vidaamuyarchi: இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *