வைஃபை ஆன் செய்ததும் திருவள்ளூர் மாவட்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
“சட்டமன்ற தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகிவிட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 15ஆம் தேதி காசியில் கொடுத்த பேட்டி, அதற்குப் பிறகு மார்ச் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சு இவை எல்லாம் திமுகவுக்கு மாநில உரிமைக்கான போராட்ட ஆயுதமாக மட்டுமல்ல… அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டு வருகின்றது.
இந்த வகையில் தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிதி உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசால் நிதி வழங்கப்படாததை கண்டித்தும், மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்வதை கண்டித்தும் தொடர்ந்து திமுக பொதுக்கூட்டங்களையும் அரங்க கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில்தான் இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். dmk election incharge appoint
இது ஒரு பக்கம் என்றால் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவின் பலம் என்ன, பலவீனம் என்ன, எதிர்க்கட்சிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன… குறிப்பாக சொல்லப் போனால் அதிமுகவின் பிரிவுகள் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்… அல்லது ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோர் இப்படியே இருந்தால் தேர்தல் களம் என்னவாகும் என பல்வேறு வகைகளிலும் மாப்பிள்ளை சபரீசனின் பென் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகிறது.
அண்மையில் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ‘தலைமையிலிருந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக முழுமையாக ஆய்வு பண்றாங்க. யார் சரியாக செயல்படுகிறார்கள்? யார் சரியாக செயல்படவில்லை என்பதையெல்லாம் தலைவருக்கு ரிப்போர்ட்டாக அனுப்பி இருக்கிறார்கள். இந்த ராமச்சந்திரன் ஓரளவுக்குத்தான் உங்களை காப்பாற்ற முடியும்.. எனவே யாருடைய பதவி பறிக்கப்பட்டாலும் நான் காரணம் இல்லை’ என்று பென் அமைப்பு நடத்தி வரும் சர்வே பற்றி கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு 234 தொகுதிகளையும் முக்கியமான சில நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கும் பணியும் திமுகவில் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு தான்.

அதேபோல நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு 35 சட்டமன்ற தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு 45 சட்டமன்ற தொகுதிகள் வருகிற பொது தேர்தலுக்கு பொறுப்பாக அளிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
அப்படி என்றால் இந்த சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர் தேர்விலும் இவர்களுடைய பங்கு இருக்குமா என்ற விவாதமும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜி 22, நேரு 35, வேலு 45 என இப்போதைக்கு 102 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் ரகசியமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். dmk election incharge appoint
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளையும் இதே போல முக்கிய அமைச்சர்களுக்கு பங்கீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்”என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.