ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (நவம்பர் 18) நடைபெற்றது.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். அனைத்துக்கட்சி சேர்ந்தவர்களின் கருத்துக்கேட்புக்கு பிறகு, பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிற்பகலில் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “முதல்வருக்கும், ஆளுநருக்கும் இருக்கும் கருத்து முரண்பாடு காரணமாக தான் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது.
1994ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வேந்தர் நியமனத்தில் முதல்வருக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இன்று ஆதரவு தெரிவிக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருநிலை, ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொருநிலை என்ற இரட்டை நிலைப்பாடு எடுப்பது தான் திமுக அரசு.
வேந்தர் நியமனத்தில் அதிமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு அன்று ஆதரவு தெரிவித்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் 3300 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
அதற்கு அதிமுக உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு இப்படி விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதற்கான தகுந்த பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநரை மூன்று பேர்கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொன்றுள்ளனர். இது திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்தளவிற்கு சீரழிந்துள்ளது என்பதற்கு உதாரணம்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்ட ஜெயலலிதாவின் பெயரை திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மாற்றிவிட்டது. அதற்காக அவையை விட்டு வெளிநடப்பு செய்தோம். ஆனால் இதனை தெரிந்தும் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அவர் திமுகவில் இருக்கிறார் என்பதை நிரூபணமாக்கியுள்ளது ” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நொண்டி சாக்கு சொல்லி எடப்பாடி வெளிநடப்பு : தங்கம் தென்னரசு தாக்கு!
‘டைம் 100’ பட்டியலில் இடம்பிடித்த 8 இந்தியர்கள்!