ஒவ்வொரு வருடமும் திமுக தலைமைக் கழகம் நடத்தும் முப்பெரும் விழா பற்றிய அறிவிப்பு இன்று (செப்டம்பர் 2) அறிவாலயத்தில் இருந்து வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்த முறை வேலூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. திமுகவில் தலைமைக் கழகம் நடத்தும் ஒரே விழாவான முப்பெரும் விழாவுக்காக வேலூர் திமுக எவ்வாறு தயாராகிறது என்பதற்காக வேலூர் திமுக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டோம்.
சிலரது எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. சிலரிடம் பேசியபோது, “வேலூர் மாவட்டச் செயலாளரான நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளை சொகுசுக் கப்பலில் இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அவர் வந்தபிறகுதான் முப்பெரும் விழா ஏற்பாடுகள் சூடுபிடிக்கும்” என்றனர்.
என்னது, இலங்கைக்கு திமுக நிர்வாகிகள் சொகுசு சுற்றுலாவா என்று நாம் மேலும் விசாரிக்கத் தொடங்கினோம். நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள்,
“வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் தனது மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகளை துபாய்க்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். அவ்வப்போது இதுபோல நிர்வாகிகளை சுற்றுலா அழைத்துச் சென்று குளிர்விப்பது அவருக்கு வழக்கம்.
அதேபோல இப்போது கடந்த 29 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பலில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். ஐந்தாறு நாட்கள் சுற்றுலா முடித்துவிட்டு மீண்டும் செப்டம்பர் முதல்வாரம் சென்னை திரும்புகிறார்கள்.
ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் நந்தகுமார். இதில் என்ன விசேஷம் என்றால்… நந்தகுமார் தனது அக்மார்க் ஆதரவாளர்களை மட்டுமே இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆட்கள், கார்த்தி எம்.எல்.ஏ.வின் ஆட்கள், எம்பி கதிர் ஆனந்தின் ஆட்கள், குடியாத்தம் எம்.எல்.ஏ.அமுலுவின் ஆட்களை எல்லாம் இந்த டூரில் கூட்டிச் செல்லவில்லை என்று திமுக நிர்வாகிகளுக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அணைக்கட்டு பாபு, வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், குடியாத்தம் நகராட்சி சேர்மன் சவுந்தரராஜன் ஆகியோர் இலங்கைக்கு சொகுசு சுற்றுலா சென்றவர்களில் சிலர். திமுக இளைஞரணி அமைப்பாளர் தேர்வின்போது பொதுச் செயலாளர் துரைமுருகன் சிபாரிசை எதிர்த்து தனது ஆதரவாளரான ராஜமார்த்தண்டனை இளைஞரணி அமைப்பாளர் ஆக்கினார் நந்தகுமார் என்பது இங்கே நினைவுபடுத்த வேண்டிய விஷயம். இலங்கையில் தனது ஆதரவாளர்களிடம் சில முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் நந்தகுமார். அதில் குறிப்பாக வேலூர் தொகுதியின் அடுத்த எம்பி வேட்பாளர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்களும் உண்டு” என்கின்றனர் நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள்.
சொகுசுக் கப்பலிலும், இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் முகப்பு உள்ளிட்ட இடங்களிலும் போட்டோ எடுத்து அதை வேலூரில் இருக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கு நிர்வாகிகள் அனுப்பி வைக்க… இங்கே அவற்றை வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலா வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள்.
இந்த சுற்றுலா குறித்து திமுகவின் வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமாரிடம் பேசினோம்.
“கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உழைத்ததற்காக வேலூர் மாவட்ட நிர்வாகிகளை துபாய் அழைத்துச் சென்றேன். இப்போது எம்பி தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து, தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக முன்கூட்டியே இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று வந்திருக்கிறோம்.
கடந்த இரண்டு மாதங்களாக இதற்காக திட்டமிட்டேன். எங்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்தேன். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எல்லாரையும் அழைத்தேன். சிலரிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதால் அவர்களால் இந்த சுற்றுலாவில் கலந்துகொள்ள இயலவில்லை. பாஸ்போர்ட் இருந்தாலும் தனிப்பட்ட சில நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் இருந்ததால் சிலர் பங்கேற்க இயலவில்லை. சிலருக்கு உடல் நலம் இல்லை. மற்றபடி யாரையும் விட்டுவிட்டு போக வேண்டிய எண்ணம் என்னிடம் இல்லை. வேலூர் திமுகவில் ஒரே க்ரூப் உதயசூரியன் க்ரூப்தான். வேறு எந்த குழு அரசியலும் இங்கே இல்லை.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற வைத்த பிறகு நிர்வாகிகளை ஐரோப்பா சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வேன்” என்று அடுத்த அதிரடியை இப்போதே அறிவித்துவிட்டார் நந்தகுமார்.
சமீபத்தில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ராமநாதபுரத்தில் நடந்த பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டுக்கு முன்பு… தனது மாவட்டத்திலுள்ள அனைத்து பாகப் பொறுப்பாளர்களையும் குற்றாலத்துக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று அமர்க்களப்படுத்தினார். இதையே தென் மாவட்டம் முதல் சென்னை வரை திமுக மாசெக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குற்றாலம் என்ன இலங்கைக்கே சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி திமுக நிர்வாகிகளை சொகுசுக் கப்பலில் ஏற்றியிருக்கிறார் வேலூர் மாசெவும் எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார். வேலூரைப் பற்றி அறிந்து மற்ற மாவட்ட திமுக நிர்வாகிகளும், தங்களது மாவட்டச் செயலாளர்களிடம் வெளிநாட்டு டூர் டிமாண்ட் வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அரசியல் கட்சியினர் ஊரு விட்டு ஊர் போயி பாத்திருக்கோம். நாடு விட்டு நாடு டூர்னா திமுகவில் நந்தகுமார் வேற லெவல்தான்!
–ஆரா
அதிமுக ஆலோசனை கூட்டம்: தேதி மாற்றம்!
Asia Cup: 266 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்!