மா.செ. பதவி கிடைக்காததற்காக அறிவாலயத்தைத் தாண்டி நீதிமன்ற படியேறியிருக்கிறார், தற்போதைய மா.செவின் ஆதரவாளர் ஒருவர்.
திமுகவில் அமைப்புரீதியிலான 15 வது பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியினர் அளித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (செப்டம்பர் 26) தொடங்கியது.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதனும், தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு அதன் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையும் மனு தாக்கல் செய்தனர்.
இதில், சிவபத்மநாதன் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், செல்லதுரைக்குத்தான் சிக்கல் எழுந்துள்ளது.
செல்லதுரையோடு செங்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட வேறு சிலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதவிர, தென்காசி எம்பியும் விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ்குமாரிடம் இருந்து மாசெ பதவிக்கான விருப்ப மனுவை கேட்டுப் பெற்றிருக்கிறது தலைமை.
இந்தத் தகவல் அறிந்து அமைச்சர் நேருவைப் போய்ச் சந்தித்தார் செல்லதுரை.
ஆனால், நேருவோ ‘என்னால் ஒண்ணும் செய்ய முடியாதுப்பா, உன்னோட கொடிக் கம்பம் சாய்ந்துவிட்டது’ எனச் சொல்லி கையை விரித்துள்ளார்.
மேலும், விருதுநகரைச் சேர்ந்த எம்.பி தனுஷ்குமாருக்கே இந்த முறை மா.செ. கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்தச் செய்தியறிந்த செல்லதுரை ஆதரவாளர்கள் செப்டம்பர் 25ம் தேதி, அறிவாலயத்தில் குவிந்து, ‘வெளிப்படையாக தேர்தல் நடத்தி மாசெவை அறிவிக்க வேண்டும்’ என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், செல்லதுரை ஆதரவாளர் ஒருவர் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்காக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் செல்லதுரைக்கு இந்த முறை மா.செ. பதவி கிடைக்காததால்தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறாராம்.
மாவட்ட கழகத்தில் 54 வாக்காளர்களில் 52 பேர் செல்லத்துரையை ஆதரிக்கின்றனர். ஆகையால் செல்லத்துரையை தவிர்த்து பிறரை தேர்ந்தெடுப்பதால்தான் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறோம்.
தங்களிடம் 54 நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறது. ஆகையால், இந்தத் தேர்தலை அறிவாலயத்தில் நடத்தக்கூடாது. முன்சீப் கோர்ட்டே முடிவு செய்யட்டும்’ என முடிவு செய்து, செல்லதுரையின் அந்த ஆதரவாளர் கோர்ட் படியேறியிருக்கிறாராம்.
தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு (2021) 23 நாட்களுக்கு முன்புதான் செல்லதுரை மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் இன்றுவரை சுமார் ஒன்றரை வருடத்தில், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற தேர்தல் என மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளார். இதில் சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூரில் மட்டும் தோல்வி அடைந்தது.
அதன் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் யாவரும் எதிர்பார்க்காத வகையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் போட்டியிட செய்து தனது சொந்த பணத்தை செலவழித்து வெற்றி இலக்கை அடைய செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமையியல் நீதிமன்றத்தை நாடியிருக்கும் மா.செயலாளரின் ஆதரவாளரை அறிவாலயம் என்ன செய்யப்போகிறது?
ஜெ.பிரகாஷ்
10% இட ஒதுக்கீடு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு: மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு!