தமிழ்நாடு நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (அக்டோபர் 6) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனக்கு கட்சியில் பொறுப்பும் இல்லை அந்தஸ்தும் இல்லை என்று விரக்தியாக பேசியிருந்தார்.
தமிழகத்தில் சமீப காலமாக அமைச்சர்களின் பேட்டிகளும், செயல்பாடுகளும் பொதுவெளியில் சலசலப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அமைச்சர் பிடிஆரின் இந்த பேட்டி திமுகவுக்குள் குறிப்பாக மதுரை திமுகவுக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது,
அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை கொடுக்கும்போது அதற்கான நிதியாதாரத்தை கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதியிருந்தது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றபோது மத்திய அரசின் மீது காட்டமான பல விமர்சனங்களை வைத்தவர் பி.டி.ஆர். அந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு எழுதிய கடிதம் பற்றி பி.டி.ஆரிடம் கேள்வி கேட்டால் அவர் சொல்லும் பதில் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பில் செய்தியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கடிதம் பற்றி கேள்வி கேட்டனர்.

ஆனால் அதற்கு பி.டி.ஆர் சொன்ன பதில் யாருமே எதிர்பாராத வகையில் இன்னொரு விதமான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது,
“அரசாங்கத்துக்கு வெளியே நடக்கும் விஷயங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. நிதியமைச்சர் என்ற வகையில் அரசைப் பற்றி சில கருத்துகளை சொல்லி வருகிறேன். ஆனால் கட்சியைப் பொறுத்தவரை நான் அடிமட்டத் தொண்டன் தான்.
எனக்கு எந்த பொறுப்பும் இல்லை, கட்சி குறித்து பேச எனக்கு எந்த அந்தஸ்தும் இல்லை. இதற்கு கழகம்தான் பதில் சொல்லும்” என்று பதிலளித்தார் பி.டி.ஆர்.
அமைச்சர் பி.டி.ஆரின் இந்த பதில்தான் அறிவாலயம் முதல் மதுரை வரை இப்போது திமுகவினரால் விவாதிக்கப்படுகிறது.
இலவசம் தொடர்பான கேள்விகளுக்கு எப்போதும் கம்பீரமாக பதில் சொல்லும் பி.டி.ஆர், ‘கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்’ என்று சொன்ன தொனியில் ஒரு விரக்தி தெரிந்தது.
இதன் பின்னணி பற்றி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“தற்போதைய அமைச்சர்களில் மிகப் பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாகவோ அல்லது தலைமைக் கழக பதவிகளிலோ இருக்கிறார்கள். அமைச்சர் புதுக்கோட்டை மெய்யநாதன் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அமைச்சராக இருந்தாலும் கட்சிப் பதவி என்பது திமுகவில் முக்கியமான ஒன்று என்பதற்கு இதுவே உதாரணம்.
இந்த வகையில்தான் பிடிஆர் தனக்கு கட்சிப் பதவி வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஏற்கனவே அவர் திமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக இருந்தார்.
அப்போது பல சர்ச்சைகளை சந்தித்தார் பிடிஆர். லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்கு பிடிஆர் செல்லாததற்கு காரணம் அவரது கொழுந்தியாள் மகளுக்கு வளைகாப்பு என்று பாஜக தலைவர் அண்ணாமலை வாட்ஸப்பில் வந்த தகவலை பேட்டியாகக் கொடுக்க அதற்கு பதிலடி கொடுத்தார் பிடிஆர். ஆனால் அந்த பதில்களே அடுத்தடுத்து பல சர்ச்சைகளைக் கிளப்பின.
குறிப்பாக இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திமுகவின் செய்தித் தொடர்பாளரும் எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மலினமான கடுமையான வார்த்தைகளைக் கொட்டினார் பிடிஆர். அதை கொஞ்ச நேரத்தில் நீக்கியும் விட்டார்.
இந்தப் பிரச்சினைகளால், ‘துறை ரீதியான கருத்தை மட்டும் வெளியிடுங்கள். பிரஸ்மீட், பேட்டிகள் கொடுக்கும்போது தலைமை அனுமதி இல்லாமல் அரசியல் கருத்துகளை வெளியிடாதீர்கள்’ என்று பிடிஆருக்கு கடிவாளம் போட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவுக்கு வந்த மகேந்திரனுக்கு திமுக ஐடி விங் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மகேந்திரனை ஐடி விங் இணை செயலாளராக நியமித்தது பற்றி தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்று பிடிஆர் வருத்தத்தில் இருந்தார்.
அதை மனதில் வைத்து மகேந்திரன் தன்னை சந்திக்க நேரம் கேட்டபோது அவருடன் போனில் கடுமையாகவே பேசினார் பிடிஆர். ஏற்கனவே டிகேஎஸ் இளங்கோவன் மீதான பிடிஆரின் கமென்ட்டால் கோபத்தில் இருந்த ஸ்டாலினுக்கு இதையும் அறிந்து பிடிஆர் மீது கோபமும் அதிருப்தியும் அதிகமானது.
இதையடுத்து 2022 ஜனவரி மாதம் 19 ஆம் தேதி ஐடிவிங் மாநில செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பிடிஆரிடம் கடிதம் வாங்கியது திமுக தலைமை.
அன்றில் இருந்து அமைச்சராக மட்டுமே இருக்கும் பிடிஆர்.… அண்மையில் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் கவனத்தைத் திருப்பினார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று சில மாதங்களாகவே காய் நகர்த்திவந்தார்.
மதுரையில் மாவட்ட வரையறையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மாநகராட்சியை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்துக்கு கோ. தளபதிதான் மாவட்டச் செயலாளர் என்று பேசப்பட்ட நிலையில்… திடீரென அறிவாலயத்தில் தனக்குள்ள செல்வாக்கின் மூலம் மாநகர மாவட்டச் செயலாளராகும் முயற்சியில் இறங்கினார் அமைச்சர் பிடிஆர்.
இதற்காக மதுரை மாநகர் திமுக பகுதிச் செயலாளர்களையும் தன் வீட்டுக்கே அழைத்துப் பேசினார்.
ஒருகட்டத்தில், ‘எனக்கு பெரும்பான்மை இருக்கிறது. என்னை போட்டியின்றி தேர்ந்தெடுங்கள் அல்லது போட்டிதான் வேண்டுமென்றால் தேர்தல் வையுங்கள் நான் நின்று ஜெயிக்கிறேன்’ என்று தலைமையிடம் சொல்லியுள்ளார் பிடிஆர்.
ஆனால் இதற்கு பெரிய அளவுக்கு பாசிடிவ் ஆக ரியாக்ஷன் வராத நிலையில் சபரீசன் மூலமாகவும் சில முயற்சிகளை செய்தார் பிடிஆர். கடைசி கட்டமாக, ‘எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.
என் ஆதரவாளருக்காவது கொடுங்கள்’ என்று ஒரு முயற்சி செய்தார். சபரீசனும் பிடிஆருக்காக முதல்வரிடம் பேசியிருக்கிறார்.

ஆனால் ஸ்டாலினோ, ‘கடந்த பத்து வருஷமா எதிர்க்கட்சியா இருந்தப்ப பாடுபட்டவங்களை திடீர்னு கைவிட்டுட முடியாது. தளபதியே இருக்கட்டும். பிடிஆர்தான் நிதியமைச்சரா இருக்காரே… அது போதும்’ என்று சொல்லிவிட்டார். இந்தத் தகவல் பிடிஆரிடம் சொல்லப்பட்டபோது அவர் வேதனை அடைந்தார்,
அந்த வேதனையைதான் அக்டோபர் 6 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ‘நான் கட்சியில் வெறும் அடிமட்டத் தொண்டன். எனக்கு பொறுப்போ அந்தஸ்தோ கிடையாது’ என்ற வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் பிடிஆர்” என்கிறார்கள்.
–வேந்தன்
மூன்று சிறுவர்கள் பரிதாப மரணம்: விசாரணைக் குழுக்கள் அமைப்பு!
கர்மா ஒரு காரணமா? தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற பெஞ்ச்!