நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், , சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த கையோடு மாவட்ட செயலாளர்கள், தொகுதிப்பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 23) காணொலி காட்சி வாயிலாக கூட்டினார்.
இந்த கூட்டத்தில் திமுகவின் திண்ணைப் பிரச்சாரம், ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக மார்ச் 2,3 ஆகிய தினங்களில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல் தீர்மானத்தில், “நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன.
பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டிய கட்சி என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். ‘நாற்பதும் நமதே – நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழகத்தின் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையாக ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதில், “ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் – என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்துள்ளோம்.
தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதி முதல், ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது.
இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதிப் பார்வையாளர்கள், BLA-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, தலைவரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும்” என்று இரண்டாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது தீர்மானமாக,
“மார்ச் 1-ஆம் தேதியன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 71-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரான ஸ்டாலின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது” என்றும் மாசெக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் பிடிஆரை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – காரணம் சொன்ன ஸ்டாலின்
கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய உத்தரவு!