தருமபுரி திமுக மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் குறித்து அவர் பேசியுள்ள ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. dmk dharmaselvan audio leak
திமுகவில் கடந்த சில நாட்களாக புதிய மாவட்டங்களை ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

ஏற்கெனவே இவரது ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையான நிலையில், அவரது நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தருமபுரியில் உள்ள ஹோட்டல் அதியமான் மீட்டிங் ஹாலில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின்னர் ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் மட்டும் தனியாக பேசினார்.
அப்போது அவர் பேசிய விஷயங்கள் தான் இப்போது ஆடியோவாக வெளியாகி கட்சியினர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நான் சொல்வதை கேட்க வேண்டும்! dmk dharmaselvan audio leak
அதில், ”நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன். எந்த அதிகாரியும் என்னை மீறி குசு கூட விட முடியாது. என்னிடம் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அவன் கதை முடிந்தது.
என்னிடம் தலைவர், ‘அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு’ என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்” என தர்ம செல்வன் கறாராக பேசியுள்ளார்.
ஒரு வாரம் கூட ஆகல… dmk dharmaselvan audio leak
மாவட்ட பொறுப்பாளராக 23ஆம் தேதி நியமியக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தர்ம செல்வன்.
அப்போது ஸ்டாலின், “உன்னை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். ஏற்கெனவே இன்பசேகரன் வெளியிட்ட ஆடியோவையும் முழுவதுமாக கேட்டேன்.
தம்பி (உதயநிதி) சொன்னதுனால தான் வேற வழி இல்லாமல் உன்னை பொறுப்பில் நியமித்துள்ளேன். பார்த்து நடந்துகொள்” என தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினை சந்தித்து இன்னும் ஒரு வாரம் கூட முடியாத நிலையில் அதற்குள் மீண்டும் தர்ம செல்வனின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த திமுக தலைமை, தர்ம செல்வனிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், “சாரி சாரி இனிமேல் இதுபோல் பண்ண மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாமும் அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.