திமுக துணைப் பொதுச்செயலாளராகக் கனிமொழி அறிவிக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து இன்று பொதுக்குழுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5 துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக திமுக எம்.பி.கனிமொழி இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்டார்.
முன்னதாக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு அடுத்த துணை பொதுச் செயலாளர் என்ற கேள்வி இருந்து வந்தது.
குறிப்பாகக் கடந்த 2, 3 நாட்களாக இந்த பேச்சு திமுகவிலும், திமுகவை தாண்டியும் அதிகமாக பேசப்பட்டது.
இந்நிலையில் புதிய துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிதான் என்ற உறுதியான தகவலை நேற்று மாலை, ‘தடை மேல் தடை: கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் ஆனது எப்படி தெரியுமா?’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.
இந்தச்சூழலில் நேற்று இரவு முதலே கனிமொழி ஆதரவாளர்களான கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி பிரமுகர் அம்மு ஆண்டோ உள்ளிட்டோர்,
துணை பொதுச்செயலாளார் பதவி கிடைப்பது உறுதி என்ற தகவலை அடுத்து வாழ்த்து சுவரொட்டிகளைத் தயார் செய்து அதனை அச்சடிக்கவும் செய்தனர்.

இரவோடு இரவாக, ‘கனிமொழி எம்.பி.யை துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்த தளபதிக்கு நன்றி’ என அச்சிட்டு போஸ்ட்டரை தயார் செய்து வைத்திருந்தவர்கள்,
இன்று காலை அறிவிப்பு வெளியான 10 நிமிடத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் அதை ஒட்டினர்.
பொதுக்குழு நடந்த சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி சுற்று வட்டார பகுதிகளிலும், அறிவாலயம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த 10 நிமிடங்களில் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
பொதுக்குழு வளாகத்தில் இருந்து வெளியே வந்த திமுக பிரமுகர்கள் கனிமொழிக்கான போஸ்டர்களை பார்த்ததும், ‘இவ்வளவு ஸ்பீடா?’ என்று ஆச்சரியப்பட்டனர்.
பிரியா, வேந்தன்