டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!  

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. அதில் திமுகவின் சீனியர் அனுப்பிய ஒரு போட்டோவும்  மெசேஜும் கவனம் ஈர்த்தது. “திமுக முப்பெரும் விழா மேடையின் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

அதில்  ஒரே ஒரு பெண் தலைமைக் கழக நிர்வாகியான துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்துகொள்ளவில்லை. இதன் பின்னணியை விசாரித்து எழுத வேண்டுகிறேன்” என்பதுதான் அந்த மெசேஜ்.

விசாரணைக்குப் பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுகவில் உட்கட்சித் தேர்தல் மிக நிதானமாக நடந்து முடிந்திருக்கிறது. மாநகர பகுதிச் செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகே மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன் பின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய தலைமைக் கழக நிர்வாகிகளோடு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

இந்த நிலையில் திமுகவின் முப்பெரும் விழாவுக்கு முன்பே இந்த உட்கட்சித் தேர்தல் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். ஆனால் பல இடங்களில் பஞ்சாயத்து, பேச்சுவார்த்தை என்று இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் செப்டம்பர் 15 ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா   விருதுநகரில் நடைபெற்றது. இந்த விழாவின் மேடையை உற்று நோக்கினால்தான், அதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியும்.

dmk deputy general secretary

திமுகவில் தற்போது  சுப்புலட்சுமி ஜெகதீசன்,  ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். 2020 வரை திமுக நிர்வாகிகள் அமைப்பில் மூன்று துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி (ஒரு பெண், ஒரு பொது, ஒரு பட்டியலினம்)  என்ற நிலையே இருந்தது.

2020 பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே இருந்தவர்களோடு பொன்முடி, ஆ.ராசா ஆகிய இரு துணைப் பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மொத்தம் 5  துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். திமுக தலைமைக் கழக மேடைகளில் இவர்கள் அனைவரும் இருப்பார்கள்.

 திமுகவின் தலைமைக் கழக நிர்வாகியாக கருதப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது கௌரவமான பதவி மட்டுமல்ல, தலைமைக் கழகத்துக்கான உயர் பொறுப்புகளுக்கு செல்வதற்கான நுழைவாயிலும் கூட.

இதில் சமுதாய பிரதிநிதித்துவம் என்ற அளவுகோலும் வைத்து பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் துணைப் பொதுச் செயலாளர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொள்ளவில்லை. இதுதான் தற்போது கட்சியின் சீனியர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் முக்கியமானவர்.

dmk deputy general secretary

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  வெற்றிபெற்றிருந்தால் சுப்புலட்சுமிதான் சபாநாயகர் என்று பேசப்பட்ட நிலையில் அவரது தோல்வி ஈரோடு முதல் சென்னை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுப்புலட்சுமி வெற்றி பெற்றால் ஸ்டாலினிடம் பேசி அமைச்சர் பதவியை பெற்றுவிடுவார் என்று ஈரோடு திமுக மாசெ முத்துசாமிதான் அவரை திட்டமிட்டுத் தோற்கடித்தார் என்று திமுகவுக்குள்ளேயே பேச்சு எழுந்தது.

இதுமட்டுமல்ல, தனது  மயிரிழை வித்தியாசத் தோல்விக்கு முத்துசாமிதான் காரணம் என்று தலைமையிடம் புகாரும் கொடுத்தார் சுப்புலட்சுமி. ஆனால் அந்த புகார் மீது தலைமை  நடவடிக்கை எடுக்காத நிலையில், அதே நேரம் முத்துசாமிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர்  பதவியைக் கொடுத்தார் ஸ்டாலின். கட்சி அளவிலும் முத்துசாமிக்கு முக்கியத்துவம் அதிகரிப்பது சுப்புலட்சுமிக்கு வேதனையை அதிகப்படுத்தியது. 

அதனால் அமைதியாகவே  இருந்து வருகிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.  ஆனாலும் சமீபமாக அவரது கணவர் ஜெகதீசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  திமுக தலைவர் ஸ்டாலினைப் பற்றியும், அவரது கட்சி நடத்தும் விதம் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த பின்னணியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமைக் கழக விழாவான முப்பெரும் விழாவுக்கு செல்லவில்லை.  

dmk deputy general secretary

இந்த முப்பெரும் விழாவில் கோவையின் ஒருங்கிணைந்த  மாவட்டச் செயலாளராக இருந்த சாமிநாதனின் மனைவி சம்பூர்ணம் சாமிநாதனுக்குதான் பெரியார் விருது வழங்கப்பட்டது. தனது மாவட்டத்தைச் சேர்ந்த சம்பூரணத்துக்கு பெரியார் விருது வழங்கப்படும் மேடையில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இல்லை என்பது மேடையிலேயே முணுமுணுக்கப்பட்டது.

இதுபற்றி விசாரிக்கும்போது இந்த உட்கட்சித் தேர்தலின் முடிவில் துணைப் பொதுச் செயலாளர்களில் மாற்றம் கொண்டுவர தலைமை முடிவு செய்திருப்பதாகவும் அதன்படி சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக  வேறு யாரை பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்ற முக்கிய ஆலோசனை தலைமையில் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

dmk deputy general secretary

பெண்கள் கோட்டாவில் எம்பியும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழியை துணைப் பொதுச் செயலாளர்  ஆக்கலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே திமுகவில் உலவுகிறது. ஆனால் கனிமொழி வட்டாரங்களிலோ  துணைப் பொதுச் செயலாளர் மீது  கனிமொழிக்கு பெரிய ஆர்வம் இல்லை என்கிறார்கள்.

கனிமொழிக்கு அடுத்தபடியாக  அமைச்சர் கீதாஜீவன் பெண்களுக்கான கோட்டாவில் துணைப்  பொதுச் செயலாளராக ஆக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தென் மாவட்டத்தில் திமுகவின்  முக்கிய ஆதரவு சமுதாயமாக இருக்கும் நாடார் சமுதாயத்தில் இருந்து தலைமைக் கழக நிர்வாகிகளில் யாருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை.

திமுக  துணைப் பொதுச் செயலாளரான சற்குணபாண்டியன்  2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காலமானார். அதில் இருந்து  அந்த இடத்துக்கு நாடார் சமுதாய பெண் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், பாரம்பரியம்  மிக்க திமுக குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதாஜீவனை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யலாமா என்ற ஆலோசனை தலைமைக் கழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.  

dmk deputy general secretary

சுப்புலட்சுமி ஜெகதீசன் விடுவிக்கப்பட்டால் அந்த பதவி கொங்கு மண்டலத்தில் இருந்தே நிரப்பப்பட வேண்டும் என்றும் ஒரு  அழுத்தம் அறிவாலயத்தின் முன் வைக்கப்பட்டு வருகிறது.  அதன்படி  அமைச்சர் முத்துசாமி அல்லது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இருவரில் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் ஒரு லாபி அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

முத்துசாமி அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு தலைமைக் கழக நியமனப் பதவியான துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்குவது  சாத்தியமில்லை என்றும் இதை அடிப்படையாக வைத்தே அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தீவிரமாக இருப்பதாகவும் திருப்பூர் திமுகவினர் சொல்கிறார்கள்.

 பெண்களுக்கான பிரநிதித்துவம் வேண்டும், அதேநேரம் கொங்குவின் பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது என்பதுதான் இப்போது ஸ்டாலின்  நடத்திவரும் முக்கிய ஆலோசனை.  இதை சமாளிக்க துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாமா என்ற யோசனையும் ஸ்டாலின் முன் வைக்கப்பட்டுள்ளது. விரைவில்  நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதற்கான விடைகள் கிடைக்கலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

டிஜிட்டல் திண்ணை: அப்பாவிடம் உதயநிதி கொடுத்த மாசெக்கள் பட்டியல்!

காங்கிரஸ் தலைவர் யார்? நிறைவேறிய முக்கிய தீர்மானம்!

+1
0
+1
2
+1
1
+1
3
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *