தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.
திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது.
திருக்குறள், சனாதனம், இந்து மதம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
மேலும், திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா, நீட் விலக்கு போன்றவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில், ” தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், திமுக மற்றும் அதன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக மாநிலங்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், “திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற மனுவை படித்து பார்த்து நாளைக்குள் (நவம்பர் 3) கையெழுத்திட வேண்டும். அந்த மனுவை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பபெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் திமுக மனு அளிக்க உள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினையின் பரிமாணங்கள்: பகுதி 1
தமிழகத்தில் கன மழை : அதிகபட்ச மழை பதிவானது எங்கே?