பன்னீர் மகனை கைது செய்ய களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன்
சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
ரவீந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி திமுக எம்எல்ஏக்கள் மற்றும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் இன்று (அக்டோபர் 14 ) புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை என்ற ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி யுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
அந்த தோட்டத்தைச் சுற்றி நான்கு புறமும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் 27 ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கியது, அதனை மீட்கும் முயற்சியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டபோது,
வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியது. தப்பி ஓடிய சிறுத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்து.
இதனையடுத்து ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் “ஆட்டுக்கிடை”அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பரை கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ரவீந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் , ரவீந்திரநாத்தை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில்,
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் புகார் அளித்துள்ளனர்.
ரவீந்திரநாத் எம்.பி யின் தோட்டத்தில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
சபாநாயகரிடம் இருந்து முறையான தகவல் வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அலுவலர் சமர்த்தா கூறியுள்ளார்.
இதனால் ஓபிஎஸ் மகன் எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நயன் – விக்கி குழந்தை விவகாரம்: மருத்துவமனையை கண்டறிந்தது சுகாதாரத் துறை!
தரூருக்கு கிடைக்காத வரவேற்பு கார்கேவுக்கு: தமிழக காங்கிரஸ் தடபுடல்!