ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட படி கலைஞர் நூற்றாண்டு விழாவை எப்படியெல்லாம் தொடர்ந்து கொண்டாடுவது என்பது குறித்த செயல் திட்டங்களை திமுக தலைமை ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்புகளில் முக்கியமானது, தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கலைஞருக்கு வரும் நவம்பர் மாதத்தில் சிலைகள் அமைத்து திறப்பு விழா காணவேண்டும் என்பது.
“மாவட்ட செயலாளர்கள் மூலம் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கலைஞர் சிலை நிறுவுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி, 234 சிலைகளை வைப்பதற்கான இடங்களையும், தேதியையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் மறைந்த பிறகு அண்ணா அறிவாலயத்தில் ஏற்கனவே இருக்கும் அண்ணா சிலைக்குப் பக்கத்திலேயே கலைஞருக்கு சிலை எடுத்தார் ஸ்டாலின். தமிழ்நாட்டின் பல இடங்களில் கலைஞர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சென்னை அண்ணாசாலையில் புதிய சட்டமன்றமாக கட்டப்பட்டு தற்போது பன்னோக்கு மருத்துவமனையாக இருக்கும் கட்டிடத்தின் அருகே கலைஞர் சிலையை அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். மிக சமீபமாக ஆகஸ்டு 11 ஆம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், பெரியபணிச்சேரியில் கலைஞர் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இவ்வாறு தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளில் கலைஞர் சிலைகள் அவ்வப்போது திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில்தான்…. 234 தொகுதிகளிலும் கலைஞர் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பினை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
”நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 234 தொகுதிகளிலும் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது தலைமை. இதை மாவட்டச் செயலாளர் தலைமையில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.தற்போது பொது இடங்களில் சிலை வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்கனவே வெளியான நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நடைமுறையில் உள்ளன.
அதன்படி பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும். இந்த தீர்மானத்தின் மீது முப்பது நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து கூறுவதற்காக பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். குறிப்பிட்ட சிலையால் சட்டம் ஒழுங்கு, சமூக ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அந்த முப்பது நாட்களுக்குள் யாரேனும் புகார் தெரிவித்தால் அது தொடர்பாக தீர்வு காணப்பட்டு, ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். அவ்வாறு ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் அந்த சிலை அனுமதித் தீர்மானத்தை மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். பேரூராட்சி, நகராட்சிகள் தீர்மானம் இயற்றி நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு சிலை அமைக்கலாம். தனிப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த இடத்தில் சிலை அமைப்பதற்கும் வரைமுறைகள் உள்ளன.
இந்த நிலையில்தான் திமுக தலைமை 234 தொகுதிகளிலும் கலைஞருக்கு சிலை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 6 அடி உயரம் கொண்ட 234 வெண்கல சிலைகளையும் தலைமையே மொத்தமாக ஆர்டர் போட்டு செய்து தரும் என்ற பேச்சு உள்ளது. அதேநேரம் அந்தந்த தொகுதிகளில் சிலை வைப்பதற்கான இடம் வாங்குவது உள்ளிட்ட செலவுகளை ஏற்பது கட்சியா, மாவட்டச் செயலாளரா, அமைச்சரா, பொறுப்பு அமைச்சரா அல்லது தொகுதியின் எம்.எல்.ஏ. திமுகவாக இருந்தால் அவரா என்ற குழப்பங்கள் எழுந்திருக்கின்றன.
கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே வைக்கலாம் என்றும் முதல்கட்ட ஆலோசனைகள் வந்துள்ளன. இது தொடர்பாக தலைமை உத்தரவுப்படி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் போட்டு விவாதிக்கும் போதுதான் அடுத்தடுத்த முடிவுகள் எட்டப்படும். இதில் லோக்கல் அரசியல், உட்கட்சி அரசியலும் கடுமையாக எதிரொலிக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில் இதுவும் இப்போது ஒரு டாஸ்க் ஆக சேர்ந்துகொண்டுள்ளது” என்கிறார்கள் திமுகவினர்.
ஆந்திரா மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு கணிசமான மாவட்டங்களில் தெருவுக்கு தெரு சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. என்.டி.ராமராவுக்குத்தான் ஆந்திராவில் அதிக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை மிஞ்சும் அளவுக்கு ராஜசேகர ரெட்டிக்கு அவரது கட்சியினர் சிலைகளை வைத்துள்ளனர்.
அதேபோல தமிழ்நாட்டில் இப்போது வரை எம்.ஜி.ஆர். சிலைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, அடுத்தபடியாக அண்ணா சிலைகள் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் கலைஞர் சிலை என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால்… ஏற்கனவே இருக்கும் பல கலைஞர் சிலைகளோடு சேர்த்து அதிகபட்ச சிலைகள் கலைஞருக்கே என்ற நிலைமை உருவாகும்.
-வேந்தன்
“என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் அமைத்தால் கடலூர் முழு பாலைவனமாகும்” – அன்புமணி