கோவையை கேட்கும் சி.பி.எம்..ஒத்து வராத திமுக..காரணம் என்ன?

அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) இரண்டு கட்சிகளுக்கும் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போலவே இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சி.பி.ஐ கட்சியைப் பொறுத்தவரை கடந்த முறை அவர்களுக்கு வழங்கப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும் மீண்டும் அவர்களுக்கே ஒதுக்குவதென முடிவாகியுள்ளது.

சி.பி.எம் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த முறை ஒதுக்கியதை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் இறுதியாக திமுக தரப்பிலிருந்து இரண்டு இடங்களுக்கே ஒப்புதல் அளித்துள்ளனர். கூட்டணியில் வேறு சில கட்சிகளும் வர வேண்டிய சூழலில், இருக்கிற எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்பதால் 2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலைப் பொறுத்தவரை சி.பி.எம் கட்சி மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் சி.பி.ஐ-க்கு கொடுத்ததைப் போல கடந்த முறை கொடுத்த அதே தொகுதிகளை சி.பி.எம்-க்கு ஒதுக்குவதில் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது.

கோவை தொகுதியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிவைத்திருப்பதால், மீண்டும் கோவை தொகுதியை இப்போதைக்கு சி.பி.எம்-க்கு உறுதி செய்ய முடியாது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சி.பி.எம் தரப்பு, கோவையை நாங்கள் விட்டுத்தர முடியாது, மீண்டும் எங்களுக்கு அதே தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

இறுதியாக திமுக தரப்பு, இப்போதைக்கு 2 தொகுதிகளை உங்களுக்கு உறுதி செய்து கொள்ளலாம். எந்தெந்த தொகுதிகள் என்பதை பின்னால் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.எம்-க்கு தொகுதி எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு, எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படாமல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்ட திமுக..அப்படி என்னதான் கேட்டது மதிமுக?

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: துரைமுருகன் மகனுக்கு சீட் உண்டா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *