நெல்லை மேயரை மாற்ற ஸ்டாலினுக்கு கடிதம்!
நெல்லை மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நெல்லையில் திமுகவை சேர்ந்த மேயர் சரவணனை அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே புறக்கணித்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாமன்ற கூட்டத்தில், நிதி மதிப்பீடு குழு அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் போது நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம் செய்ததோடு தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதனால் மேயர் மற்றும் துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினர்.
தொடர்ந்து சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மேயர் சரவணன், “மதிப்பிற்குரிய உறுப்பினர்களே” என்று பேச ஆரம்பித்த உடனே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் மேயரின் பேச்சை புறக்கணித்து வெளியேறினர்.
இந்நிலையில் மேயர் சரவணனை மாற்றக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கவுன்சிலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
45 கவுன்சிலர்கள் மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று கையெழுத்திட்டு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், அமைச்சர் உதயநிதிக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் மனு கொடுத்துள்ளனர்.
மேயர் சரவணனின் செயல்பாடுகளால் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
நாங்குநேரி சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
ஆளுநரை கேள்வி கேட்ட அம்மாசியப்பனின் வேலையை காலி செய்ய பாஜக திட்டம்!