சுதந்திர தின விழாவில் இன்று (ஆகஸ்ட் 15) நெல்லை மேயர் பேசிக் கொண்டிருக்கும் போதே திமுக கவுன்சிலர்கள் எழுந்து சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் சரவணன் கொடியேற்றினார்.
தொடர்ந்து சுதந்திர விழாவில் மேயர் சரவணன் பேசத் தொடங்கினார். “மதிப்பிற்குரிய மாமன்ற உறுப்பினர்களே” என்று பேச்சை தொடங்கியபோதே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் பேச்சை புறக்கணித்து வெளியேறினர்.
திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனை அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே தொடர்ந்து புறக்கணிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
திமுக எம்.எல்.ஏ அப்துல் வஹாப் தரப்பு மற்றும் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கானின் தரப்பு என நெல்லை திமுக நிர்வாகிகளுக்கு இடையே உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாமன்ற கூட்டத்தில், நிதி மதிப்பீடு குழு அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் போது நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம் செய்ததோடு தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதனால் மேயர் மற்றும் துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கொடியேற்றி வைத்தவுடன் மேயர் பேச்சை கேட்காமல் திமுக கவுன்சிலர்கள் வெளியேறி உள்ளனர்.
மோனிஷா
6ஜி நோக்கி இந்தியா : மோடி பேச்சு!
தடா சந்திரசேகரன் மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கும் நாம் தமிழர் கொடி!