வாக்காளர் இறுதிப்பட்டியலில் அதிமுக வாக்குகளை நீக்க வேண்டும் என்று திமுக சதி செய்வதாக ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வரும் 22 ஆம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிட இருக்கிறது. மேலும் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க இருக்கிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு பாகமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுச் செயலாளர் அறிவுறுத்தினார்.
வாக்காளர் இறுதிப்பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு குடும்பத்தினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கதவு எண்கள் என பல்வேறு குளறுபடிகள் உள்ளது.
மேலும் அதிமுக வாக்குகளை குறிவைத்து நீக்க வேண்டும் என்று திமுக சதி செய்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் சாதகமாக இருந்துவிடக் கூடாது. அதனால் இறுதி வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னாள் முதல்வரும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வருகிறது. அதை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குகின்ற வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும். எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் முந்தைய அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
மேலும் திமுக ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு, சட்டஒழுங்கு சீர்கேடுகளையும் நாம் மக்களிடம் கூற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூறினார்” என்று ஜெயக்குமார் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பு எப்போது?
மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?