பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 14) குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் காட்டியுள்ளார்.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ரவுடி திருவேங்கடம் போலீசாரால் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
திமுக நிர்வாகிகள் 3 பேருக்கு தொடர்பு!
இந்த நிலையில் திருச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் திமுகவினரும் சிக்கி உள்ளனர். திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேருக்கு தொடர்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
அதற்கான ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.
அவசர என்கவுன்டரின் அவசியம் என்ன?
தொடந்து அவர், ”ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதால் தான் உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது.
அவசர அவசரமாக என்கவுன்டர் என்ற பெயரில் ஒரு உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன?
3 முக்கிய குற்றவாளிகளும் தானாக வந்து சரணடைந்த நிலையில் எப்படி தப்பி ஓட முயற்சி செய்வார்கள்? இதில் என்ன லாஜிக் உள்ளது?
போலீஸ் காவலில் இருந்தவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்திருக்கும்? அதிகாலையில் ஆயுதம் எடுப்பதற்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?
திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர் கொடுத்த வாக்குமூலம் மூலம் வழக்கு விசாரணை முடிய போகிறதா?
எந்த ஒரு வழக்காக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தை பொருத்தவரை பல அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விவரங்களை தெரிவித்து வரும் நிலையில் அவசர அவசரமாக என்கவுன்டர் செய்ய காரணம் என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை. தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் என்கவுன்டர் போன்ற அளவிற்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.
காவிரி : மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை!
மேலும் அவர், “காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளது.
காவிரி நீரை பகிர்வது தொடர்பாக ஏற்கெனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் பிரச்னை இல்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக சமரசம் பேசியாவது காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்“ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி ஏன் முக்கியமானது? : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் : ஏன், எப்படி நடந்தது? காவல்துறை விளக்கம்!