”அதிமுகவின் ஒற்றுமையை திமுக விரும்பியதால் தான் சட்டமன்றத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருக்கும் அருகருகே இருக்கை வழங்கப்பட்டது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் தான் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமாரை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
சட்டமன்றத்தில் அருகருகே இருக்கை!
இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. அப்போது சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்ற மாண்பு படி ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தொடர்வார் என்று அறிவித்ததோடு எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனை விரும்பாத இபிஎஸ், சட்டமன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
அதிமுக ஒற்றுமையை விரும்பும் திமுக!
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், அதிமுகவை பாஜக பிரிக்கப் பார்க்கிறது என்றும், திமுக சேர்த்து வைக்க பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், ”மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரேவை பிரித்தது பாஜக தான். அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களது வில் அம்பு சின்னத்தை முடக்கியது.
அதேபோல் தமிழகத்திலும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பகைமையை ஏற்படுத்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தினை முடக்க பாஜக வேலைபார்த்து கொண்டிருக்கிறது.
அதேவேளையில், அதிமுக பகைமையை மறந்து ஒன்றுபட வேண்டுமென திமுக விரும்புகிறது. அதனால் தான் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு திமுக தேவை!
தொடர்ந்து பேசியவர், ”சமீபத்தில் நடைபெற்ற உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்தார்.
இதே போல் இந்தியா முழுவதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தேவை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவைப்படும் காலம் இது” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இலங்கை – நெதர்லாந்து: சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறுமா இலங்கை?