திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் இன்று (மார்ச் 9) மாலை சென்னை வருகின்றனர்.
திமுக கூட்டணியில் மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில், திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகின்றனர். தொடர்ந்து இன்று மாலை அறிவாலயத்தில் காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்று தெரிகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே திமுக, தனது கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தநிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான காங்கிரஸ், தங்களுக்கு எண்ணிக்கை குறையக் கூடாது என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்பாலு தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேசிவந்தார். டெல்லி தலைமையுடன் போனில் திமுக பேசிவருவதாக ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துவந்தார். இந்தநிலையில், முகுல் வாஸ்னிக், அஜோய் குமார் இன்று தமிழகம் வர உள்ளதால், காங்கிரஸ் – திமுக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இந்தசூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கார்த்தி 26’ டைட்டில் இதுதான்!
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு!