dmk conference on june 3

கலைஞர் நூற்றாண்டு விழா: ஜூன் 3ல் மாநாடு!

அரசியல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி திருவாரூரில் திமுக மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 22) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்கப்பட்டு, மாநாடு நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த நம் கழகத்தை மேலும் வலிமைப்படுத்த, ஒரு கோடி உறுப்பினரை சேர்க்க ”உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுத்திருக்கிறது.

துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைக் கழகத்தில் இணைத்திடுவோம்.

கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்குத் தந்த திருவாரூரில் – ஜூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அகில இந்தியத் தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

2026 வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

”தண்ணீரை காக்க வேண்டும்”: முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *