வைஃபை ஆன் செய்ததும், ‘முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்காக டெல்லி செல்ல இருந்த பயணம் ரத்து’ என்ற ப்ளாஷ் நியூஸ்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த மே 27 ஆம் தேதி தேசிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அதிகாரபூர்வமான அறிவிப்பாக இது வரவில்லை என்றாலும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் இதை மறுக்கவில்லை.
இந்தத் தகவல் வெளியான அன்றே அதாவது மே 27 ஆம் தேதியே மேற்கு வங்காளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி. ‘நான் எப்படி அன்று டெல்லிக்கு போக முடியும்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு, தேர்தலை விட்டுவிட்டு நான் எப்படி டெல்லி போக முடியும்?’ என்று கேட்டார் மம்தா பானர்ஜி.
இதற்கிடையே அந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்றும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில் மே 28 ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனையில் ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம், ‘ஜூன் 1 ஆம் தேதி கூட்டத்தில் அஜெண்டா என்னனு சொல்லியிருக்காங்களா? ரிசல்ட்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி என்ன பேச முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு டி.ஆர்l.பாலு, ‘எனக்கு போன்லதான் சொன்னாங்க. கூட்டம் காலையிலயா சாயந்தரமானு கூட தெரியலை. இன்ஃபார்மல் மீட்னு சொல்றாங்க. ஆனால் மம்தா தேர்தல் இருக்குறதால வர முடியாதுனு சொல்லிட்டாங்க. உபிலயும் அன்னிக்கு தேர்தல் நடக்குது, பிகார்லயும் தேர்தல் இருக்குது. அகிலேஷ், தேஜஸ்வி யும் வர்றாங்களானு தெரியலை’ என்று சொல்லியிருக்கிறார்.
கூடவே, ‘அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்ற ஜாமீன் முடிஞ்சு ஜூன் 2 ஆம் தேதி சரண்டராகணும். அதனால 1 ஆம் தேதி மீட்டிங் வச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
அந்த ஆலோசனையின் முடிவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.
அதாவது, ‘தலைவர் ஸ்டாலின் அறிவுரையின்படி ஜூன் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாசெக்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் மைய தலைமை முகவர்கள் கலந்துகொள்ளும் கலந்தாலோசனை கூட்டம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி மூலம் நடைபெறும்’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு வேளை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால்தான் அமைப்புச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது போல என்று கூட திமுகவினர் பேசிக் கொண்டனர்.
ஆனால் ஸ்டாலினோ மீண்டும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில், ‘தேர்தல் முடிவுகளுக்கு முன் நடக்கும் கூட்டத்தில் எதையும் நாம் விவாதிக்க முடியாது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அடுத்த நாளே இந்தியா கூட்டணியின் எம்பிகளை டெல்லியில் கூட்டி குடியரசுத் தலைவருக்கு நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டலாம். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு முன் நாம் என்ன செய்ய முடியும்? இன்ஃபார்மல் மீட்டிங் என்றுதான் சொல்கிறார்கள்’ என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள், மமக போன்ற கட்சிகளின் சார்பில் ஏற்கனவே மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அந்த கட்சிகளுக்கும் முறையான அழைப்பு இல்லை என்று சொல்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
இந்த நிலையில்தான் திமுக சார்பில் நீங்களே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வாருங்கள் என்று டி.ஆர்.பாலுவிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். மேலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின் டெல்லி செல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறாராம் ஸ்டாலின். அதனால் ஸ்டாலின் டெல்லி செல்வதாக ஊடகங்களில்தான் பேச்சு வந்ததே தவிர மே 28 ஆம் தேதியே ஸ்டாலின் டெல்லி செல்லும் திட்டத்தில் இல்லை என்கிறார்கள் அறிவாலய தரப்பினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup 2024: சாதிப்பாரா கோலி? முறியடிக்கப்பட காத்திருக்கும் 5 சாதனைகள்!
அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா: திருமாவளவன் விமர்சனம்!