வர்றவன்லாம்… புதுசா கட்சி தொடங்குறவன்லாம்…- விஜய்யை ஏக வசனத்தில் விளாசிய ஸ்டாலின்

அரசியல்

கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திராவிட மாடல் அரசு மக்கள் விரோத மாடல் அரசு என்று அக்கட்சித் தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடினார்.

ஆனால், இதற்கு திமுக தலைமை தரப்பில் வெளிப்படையான பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு வாரம் கழித்து இன்று  (நவம்பர் 4) திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் நடந்த விழாவில் விஜய் பெயரைச் சொல்லாமல் பதிலளித்துள்ளார்.

கொளத்தூரில் படிப்புத் தளம், பணியாற்றும் தளம், உணவுத் தளம் ஆகியவை அடங்கிய ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டு இளைஞர்களையும் அவர்கள் எல்லா நிலையிலும் தகுதி உடையவர்களாக உயர்த்துவதுதான்   திராவிட மாடல் ஆட்சியின் குறிக்கோள். ஆனால், இன்று சிலர் நம்மை குறை சொல்லிக்கிட்டிருக்காங்க. அவங்க இதையெல்லாம் பார்க்கணும். அவங்க யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி…

திராவிட மாடல் ஆட்சி  தேர்தலில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளைத் தொடப் போகிறோம். தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகள் சொன்னோமோ அதையெல்லாம் நிறைவேற்றி வருகிறோம். மிச்சமிருக்கக்கூடிய ஒன்றிரண்டு வாக்குறுதிகளைக் கூட விரைவாக நிறைவேற்ற போகிறோம்.

ஒருபக்கம் இளைஞர்களுக்குரிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறோம். இன்னொரு பக்கம் தொழிலில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. பல தொழில் முனைவோர் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.   இந்தியாவிலேயே தொலை நோக்கு சிந்தனை கொண்ட சிறந்த மாநில அரசாக தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாதிரி இந்த அரசும் அச்சீவ் பண்ணும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு எந்தெந்த மாநில அரசு எந்தெந்த துறைகளில் முன்னணியாக இருக்கிறது என்று அறிக்கை வெளியிடுகிறது. அதில் தமிழ்நாடு அரசு பல துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

திட்டங்களை அறிவித்துவிட்டுப் போய்விடலாம்… அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது கூட சாதாரணமானது. ஆனால் அந்தத் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா, தேவைப்படுகிறவர்களை போய் சேர்கிறதா என்று கண்காணிக்கும் அரசாகவும் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறோம். கோட்டையில் இருந்து உத்தரவிடப்படும் திட்டங்கள் நடக்கிறதா இல்லையா என்று களத்தில் போய் பார்க்கக் கூடிய முதலமைச்சராக நான் இருந்துகொண்டிருக்கிறேன்.

நாளைக்குக் கூட கோவைக்குப் போகிறேன்.. புதிய புதிய திட்டங்களை  செயல்படுத்துவதற்காக போகிறேன். அதுமட்டுமல்ல  ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்யப் போகிறேன்.

சமீபத்தில் கூட சென்னை மாநகரத்தில் மழையைப் பார்த்தோம். ஏற்கனவே பல மழைகளைப் பார்த்திருக்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரிய திறந்துவிட முதலமைச்சரை தொடர்புகொள்ள முடியாமல் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இன்று அப்படி இல்லாமல் முதலமைச்சர் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்கள், கவுன்சிலர்கள் மட்டுமல்ல, இந்த அரசோடு உட்பட்ட திமுக நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள் என எல்லாரும் களத்தில் நின்று பணியாற்றுகிறோம். அதனால்தான் இரு நாட்கள் மழை பெய்தும்  அடுத்த நாள் சாலையில் மழைநீர் தேங்கவில்லை. இதை கண்கூடாக நீங்களே பார்த்தீர்கள்.  ஆனால், சில மீடியாக்கள் போன வருடம் மழை தேங்கிய போட்டோவை வைத்து பாத்தீங்களா என்று போட்டனர். ஏனென்றால் திமுக வளர்வது அவங்களுக்குப் பிடிக்கலை.

அதனால்தான் யார் யாரோ வர்றவன்லாம்,  புதுசா கட்சி தொடங்குறவன்லாம் திமுக அழியணும், ஒழியணும்னு அந்த நிலையில போயிட்டிருக்காங்க. நான் அவங்களுக்கெல்லாம் சொல்றேன்… அவர்களுக்கு பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆட்சியின் சாதனைகளை ஒரு கனம் எண்ணிப் பாருங்கள். ’வாழ்க வசவாளர்கள்’ என அண்ணா சொல்லுவார். அதைத்தான் நான் சொல்ல முடியும்.

நாம் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தேவையில்லாமல் நாங்கள் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்குப் பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை. ஆகவே எங்களுக்கு எந்த நம்பிக்கையோடு எங்களிடம் ஆட்சியை ஒப்ப்டைத்து  வாக்களித்தீர்களோ அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து உங்களுக்காக பணியாற்றுவோம், பாடுபடுவோம்” என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின். விஜய்யைதான் பெயர் குறிப்பிடாமல்  முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

விஜய் மாநாட்டுக்கு மறு நாள் அக்டோபர் 28 ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,    ‘நேத்து நடந்த மாநாட்டைப் பத்தியெல்லாம் ரொம்ப கவலைப்பட வேணாம். அந்தக் கட்சி இந்தக் கட்சினு எந்தக் கட்சி வந்தாலும் நம்மைதான் விமர்சிப்பாங்க. இது புதுசு இல்லை. அதனால நாம யார் பேரையும் சொல்லி பதில் சொல்ல வேண்டியதில்லை, தேவைப்பட்டா தலைமைக் கழகம் பதில் சொல்லும். நாம நம்ம வேலையப் பாப்போம்” என்று பேசியிருந்தார்.

இதை மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில்,  விஜய் மாநாடு… அறிவாலயக் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன வார்த்தை! என்ற தலைப்பில் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தோம்.

அறிவாலய உள்ளரங்கத்தில் பேசிய அதே பதிலையே  இன்று கொளத்தூரில் வெளிப்படையாக சற்றே அதிரடியாக பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

ஒரு நாளைக்கு 100 சிகரெட்… இப்போ திருந்திட்டேன் : ஷாருக் சொன்ன நல்ல விஷயம்!

மயங்கி விழுந்த மாணவிகள்… தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? : பெற்றோர் முற்றுகை!

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *