காய்ச்சலிலும் காணொளியில் வந்த ஸ்டாலின்

அரசியல்

திருச்சி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலையைத் தொடர்ந்து சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 5)  திருவள்ளூரில்  நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனால் இன்றைய கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ஆயினும் காணொளி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்பட்டதால் இந்நிகழ்ச்சியில் நேரில் வந்து உரையாற்ற முடியாமல் போனது. இதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக் கூடியவர்களைத் தனித் தனியாகச் சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் தொண்டை சரியில்லை.

உண்மையாகப் பாடுபட்டு பணியாற்றிய, கட்சி உடன் பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அத்தனை பேருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அங்கு வரவில்லை என்றாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் அங்குதான் உள்ளது. அங்கு என்ன நடக்கிறது, எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது எனத் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருந்தேன்.

அதனால் யாரும் என்னைத் தவறாக நினைத்துக்கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அதிகம் பேசக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய பேச்சைச் சுருக்கமாகப் படிக்குமாறு உதயநிதியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதன் பின் ஸ்டாலின் ஆற்ற வேண்டிய உரையை  இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.

அதில்,  “இன்றே பாகப் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியைத் தொடங்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனைகளை நடத்துகிறார்கள். இப்போது கூட அமைச்சர் எ.வ. வேலுவை சோதனை செய்து வருகிறார்கள். ரெய்டுகள் நடத்தி நீட்டிய இடத்தில் அதிமுகவிடம் கையெழுத்து வாங்கியதைப் போல நம்மை நினைக்கிறார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது.

நம்முடைய சாதனைகளை மட்டுமல்ல, பாஜகவின் உண்மை முகத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். அதிமுக-பாஜக வெளிப்படையாக கூட்டணியாக வந்தாலும் சரி மறைமுகமான கூட்டணியோடு வந்தாலும் சரி… அவர்களைத் தோற்கடித்து நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியா கூட்டணி அமைய வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலினுடைய உரையைப் பேசினார் உதயநிதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

KH 233 படத்தில் நடிக்கும் சிவராஜ் குமார்

நாய்க்கறி உண்பவர்களா?: ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *