டிஜிட்டல் திண்ணை: வட்டச் செயலாளர் தேர்தல்: சென்னை திமுகவுக்குள் எரிமலை!

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இணைய இணைப்பு உடனே கிடைக்கவில்லை  5ஜி ஏலம் போன பின்னாலும் சில நெட்வொர்க்குகள் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறதே  என்று கோபம் வந்தபோதுதான், ‘திமுக உட்கட்சித் தேர்தல் எப்பதான் முடியும்?’ என்று ஒரு கேள்வி மெசஞ்சரில் வந்தது. அதற்கு பதிலை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். 

“திமுகவின் உட்கட்சித் தேர்தலை கடந்த மே மாதத்தோடு முடித்து  ஜூன் 3  ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளுக்குள் புதிய நிர்வாகிகள் பட்டியலை முழுமையாக வெளியிட்டுவிடுவது என்று திட்டமிட்டிருந்தார் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.

ஆனால் உட்கட்சித் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுவதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கிடைத்த தகவல்களை அடுத்து மெதுமெதுவாக நகர்த்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும்  நடக்கும் உட்கட்சித் தேர்தலைவிட சென்னையில், சென்னை மாநகரத்தில் நடக்கும் உட்கட்சித் தேர்தல்  மிகவும் பரபரப்பானது.

மற்ற பகுதிகளும் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன என்றாலும், சென்னை என்பது  கட்சித் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும்  இருப்பதால் இங்கே நடக்கும் உட்கட்சித் தேர்தல் வேற லெவலில் இருக்கும்.

மாநகர திமுகவின் உயிர் நாடியாக இருப்பவர்கள் வட்டச் செயலாளர்கள். சென்னையில் முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர்கள் பகுதிச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டு, பகுதியில் இருந்து வட்டம் மூலமாகத்தான் அந்த உத்தரவு செயல்படுத்தப்படும்.

சென்னையில் கட்சியை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பவர்கள் வட்டச் செயலாளர்கள்தான். அதனால் சென்னை திமுகவில் வட்டம் என்றாலே ஒரு பவர் உண்டு.

சென்னை மாநகராட்சியில் 200 வட்டங்கள் நிர்வாக அமைப்பில் இருக்கிற நிலையில்  ஒவ்வொரு வட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு கட்சி ரீதியில் 400 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த மே மாதம் வெளியான திமுக தலைமைக் கழக அறிவிப்பில் மாநகராட்சி நிர்வாக அமைப்புப்படியே கட்சி நிர்வாக அமைப்பும் இருக்கும். அந்த எண்ணிக்கையிலேயே கட்சி வட்டச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.

அப்படிப் பார்த்தால் சென்னையில் 200 வட்டச் செயலாளர்கள்தான் உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மொத்தமுள்ள 400 வட்டச் செயலாளர்களில் 200 வட்டச் செயலாளர்கள் பதவி இழப்பார்கள், அவர்களின் தலைமையிலான, ‘பாடி’யும் பதவி இழக்கும் என்ற சூழல் உருவானது. இது சென்னையில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியதால் சென்னையில் பழையபடி 400 வட்டச் செயலாளர்களுக்கு தேர்தல் நடக்கும் என தலைமை அறிவித்தது.

அதன்படியே  கடந்த  இரு மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் மூலம்  வட்டச் செயலாளர் பதவிக்கு மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் இருக்கும் 400 வட்டச் செயலாளர்கள் பதவிக்கு சுமார் 4 ஆயிரம் பேர் மனு கொடுத்திருந்தனர். இதனால் மாவட்டச் செயலாளர்களுக்கும்,  தலைமைக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு வட்டத்திலும் தற்போதைய வட்டச் செயலாளருக்கு எதிரான வலுவான கோஷ்டிகள் நிறையவே இருந்தன.  

alt="DMK office bearers dissatisfied"


இந்த நிலையில்தான்  ஆகஸ்டு முதல் வாரத்தில் சென்னையில் இருக்கும் ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் மாவட்டச் செயலாளர்கள் அலுவலகத்திலேயே வைத்து  வட்டச் செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதாவது சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர், அம்மாவட்டத்தின் தேர்தல் ஆணையர் ஆகியோர் வட்டச் செயலாளர் பதவிக்குவிண்ணப்பித்தவர்களை அழைத்து  நேர்காணல் செய்தனர்.

எப்படி தெரியுமா? உள்ளே சென்றவுடனேயே, ‘இதப் பாருங்கப்பா…  தலைவர் கட்சித் தேர்தல் அமைதியா நடக்கணும்னு ஆசைப்படுறாரு. கோஷ்டிப் பூசல் இருக்கவே கூடாதுனு சொல்லியிருக்காரு. அதனால இப்ப இருக்குற வட்டச் செயலாளர்களை அப்படியே ரிடெய்ன் பண்ணிக்க சொல்லியிருக்காங்க. அதனால  இப்ப இருக்குற வட்டச் செயலாளர்கள் தொடர்ந்து இருப்பாங்க. அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க. அவ்ளதான்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

இதனால்  வட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் மாவட்டச் செயலாளருடனும், தேர்தல் ஆணையருடனும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ‘அப்புறம் எதுக்கு தேர்தல் அறிவிச்சீங்க? ஃபார்ம் கொடுக்க சொன்னீங்க?  நாங்க பாட்டுக்கு பேசாம இருந்திருப்போமே?’ என்று  வட்டச் செயலாளர்  பதவியைக் குறிவைப்பவர்களின் கேள்விகளுக்கு ஆணையர் அளித்த பதில் இன்னும் அவர்களை சூடாக்கிவிட்டது.

‘உங்க வட்டத்துல நீங்க வலுவா இருக்கீங்கனு தெரியும். ஆனாலும் கட்சியில  அடிதடி, வெட்டுகுத்து வரக் கூடாதுனுதான் தலைவர் இந்த முடிவெடுத்திருக்காரு. வட்டச் செயலாளர் பதவியை மட்டும்தான் மாத்தலை. மத்த நிர்வாகப் பதவிகள்ல உங்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்படும்.  வட்டச் செயலாளரைத் தவிர   அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள் மூவர் (ஆதிதிராவிடர்-பெண்-பொது) ஒரு பொருளாளர் என 6 நிர்வாகிகள், பகுதிப் பிரதிநிதிகளாக 5 பேர், வட்ட செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் என 21 நிர்வாகிகள் இருக்காங்கள்ல.

அந்த நிர்வாகப் பதவிகளுக்கு  நீங்க வரலாம்’ என்று வட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்தவர்களிடம் சொல்லப்பட்டது.

இதனால் அவர்களும் சமாதானம் ஆகவில்லை. இப்போது இருக்கும் வட்டச் செயலாளர்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். ‘ஏற்கனவே எங்களுக்கு குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்கறவங்களை வட்ட நிர்வாக பதவியில சேர்த்தால் அப்புறம் எப்படி எங்களை செயல்பட விடுவாங்க?’ என்று வட்டச் செயலாளர்களும் குமுறுகிறார்கள். மீண்டும்  பதவி கிடைக்கும் சந்தோஷத்தையே இந்த மூவ் கெடுத்துவிட்டது  என்கிறார்கள் வட்டச் செயலாளர்கள்.

ஆக முறைப்படி தேர்தல் நடத்தினாலும் சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்பு இருக்கிறது.  அதனால் தலைமையின் உத்தரவுப்படி வட்டச் செயலாளர்கள் விவகாரத்தில் ஒரு முடிவெடுத்தாலும் கட்சி நிர்வாகிகளிடம் எதிர்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை மாநகர வட்டச் செயலாளர்கள் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும்  என்று சொல்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

alt="DMK office bearers dissatisfied"

அதனால்தான்  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கடந்த வாரம் முழுதும் சென்னையின் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியே அழைத்து அவரவர் மாவட்டத்தில் நிலவும் வட்டச் செயலாளர்கள்  நியமன பிரச்சனையை முடிந்தவரை சமாதனமாக பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி வருகிறார்.

இதனால் மாசெக்களும் கடுமையான  மன உளைச்சலில் இருக்கிறார்கள். தங்களுக்கு ஒத்துவராத வட்டச் செயலாளர்களை மாற்றவும் மாசெக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

பத்து வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது வட்டச் செயலாளர் பதவியில் இருந்து உழைத்தவர்களுக்கு மீண்டும் அப்பதவியை ஆளுங்கட்சியாக இருக்கும்போது கொடுப்பது நியாயம் என்கிறது கட்சித் தலைமை. ’ பத்துவருடம் வட்டச் செயலாளராக இருந்து ஒவ்வொருவரும் சம்பாதித்ததும், பொதுமக்களிடம் பெயரை கெடுத்துக் கொண்டதையும் தலைமை ஏன் மறந்தது?’ என்று கேட்கிறார்கள் வட்டச் செயலாளர் பதவிக்கு முயற்சிக்கும் புதியவர்கள். சென்னை மாநகர திமுகவுக்குள் ஓர் எரிமலை புகைந்துகொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். 

இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *