எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். DMK cannot be defeated
அமைச்சர் ரகுபதி இன்று (பிப்ரவரி 13) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
சமீபத்தில், மூட் ஆப் தி நேஷன் என்ற தலைப்பில் இந்தியா டுடே, சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட சர்வே முடிவு குறித்து பேசிய அவர்,
“திராவிட மாடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் பலன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்றடைந்திருக்கிறது.
அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும் எல்லோரும் எனக்கு ஜூனியர்தான் என்று சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது.
இதன்மூலம் அவர் எந்தளவுக்கு ஆதங்கத்துடன் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அங்கே இருக்கக்கூடிய சீனியர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
இதன் வெளிப்பாடாகத்தான் ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் எல்லாம் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளை வாங்கிய திமுக கூட்டணி 52 சதவிகிதம் பெறும். அதுவே அதிமுக 23 சதவிகிதம் பெற்றிருந்தது. இந்த சதவிகிதம் 20ஆக குறையும் என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன. அதாவது எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும், சேராவிட்டாலும் வெறுமனே என்.டி.ஏ என்று போட்டு ஒரு 21 சதவிகிதத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே எல்லோரும் சேர்ந்து வந்தாலும், தனியாக இருந்தாலும் திமுகவை எதையும் செய்ய முடியாது. எதிர்ப்பலை என்பது கிடையவே கிடையாது. சிலர் ஏதாவது ஒரு சம்பவத்தை மிகைப்படுத்தி இந்த ஆட்சியை குறை சொல்கிறார்கள். அதிமுக கூட்டணி சலசலத்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இந்த 52 சதவிகிதத்தை உயர்த்துவோம். அதன்மூலம் தொடர்ந்து திமுக ஆட்சியில் இருக்கும்” என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு…
பொதுவாக கருத்துக்கணிப்பு முடிவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
குறிப்பிட்ட அளவு ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இந்த சர்வே மூலம் எடுத்துச் சொல்கிறார்கள். இதை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டு, இந்த வாக்கு சதவிகிதத்தை உயர்த்த பணிகளை செய்வோம்.
கண்ணுக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லை என திமுக அதீத நம்பிக்கையில் இருக்கிறதா?
நாங்கள் அப்படி சொல்லவில்லை. எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. அந்த வாக்கு வங்கிகள் எல்லாம் சேர்ந்து வந்தாலும் கூட எங்கள் வாக்கு வங்கியை வெல்ல முடியாது.
சட்டமன்றத் தேர்தலில் உங்களுடைய எதிரி அதிமுகவா? விஜய்யா?
கருத்து கணிப்புகளின்படி தனிக்கட்சியாக பார்த்தால் அதிமுகதான்
அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?
அவருக்கு வேலை இல்லை என்றால் எங்கேயாவது சென்று செங்கலை எடுத்து பார்க்கட்டும். அறிவாலயத்தில் அவரால் கை வைக்கக்கூட முடியாது.
செங்கோட்டையன் திமுகவில் இணைய இருப்பதாகவும், அதற்கு இங்கு இருக்கக் கூடிய மூத்த அமைச்சர் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்களே?
நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவில்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறார் என்றுதான் சொல்கிறேன்.
பிரசாந்த் கிஷோர் 15- 20 சதவிகித வாக்கு வங்கிக்கு தவெகவுக்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறாரே?
தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பதால் பிரசாந்த் கிஷோர் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.
திமுகவுக்கும் பிரசாந்த் கிஷோர் வேலை செய்திருக்கிறாரே?
எங்களுக்கு வேலை செய்தார் என்றாலும் மக்கள் சக்தி எங்களிடத்தில் இருந்தது. அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே களத்தை தயார் செய்தோம்.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?
அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார் அமைச்சர் ரகுபதி.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கேள்விக்கு…
“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு சப்ஜெக்ட். மத்திய அரசு எடுத்தால்தான் சரியாக இருக்கும். நாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதற்குண்டான சட்ட வலிமை கிடையாது.
எனவே, மத்திய அரசை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க சொல்லி நாங்கள் வலியுறுத்துகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் எடுப்பது சட்டப்பூர்வமாக செல்லாது.
மற்ற மாநிலங்களைப்போல் சர்வே எடுத்து வைத்து என்ன செய்வது? அதை நடைமுறைப்படுத்த முடியாது. நீதிமன்றம் சென்றாலும் செல்லாது” என பதிலளித்தார். DMK cannot be defeated