சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் – பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆளும் திமுக கட்சி தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.
திருநெல்வேலியில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்தும் மாநில அரசின் உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு புரியாத மொழிகளில் பெயர் வைக்கப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான 3 சட்டத்திற்கு இந்தியில், சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தார்கள். அவை தென்மாநிலங்களில் இருக்கக்கூடிய பல வழக்கறிஞர்களின் வாயில் கூட நுழையவில்லை. அப்படியென்றால் சாமனிய மக்களின் நிலை?
வெளிநாடுகளில் திருக்குறளையும், உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என்று பிரதமர் மோடி கூறி வருவதாக பாஜகவினர் சொல்கின்றனர் . ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் பாஜக அரசு தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை. இது தான் அவர்களின் நிலைப்பாடு.
தென்மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை எப்படி போனாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது.
மாநில அரசு கொடுக்கும் ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாட்டுக்கு 1 ரூபாயில் 26 பைசா, பாஜக அரசு ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்திற்கு 2 மடங்காக திருப்பி கொடுக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
இதுகுறித்து கேட்டால் உத்தரபிரதேசம் முன்னேற வேண்டிய மாநிலம் என்று பதில் கூறுகிறார்கள். கடந்த 10 வருடங்களாக அந்த மாநிலத்தில் பா.ஜ.க தான் ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.”
இதுபோன்று மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தான் தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம்.
நெல்லை, தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை ஏற்பட்டது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அதனை காண ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். அவர் வாழ்வாதாரம் இழந்து தவித்த பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சிந்திக்கவே இல்லை. ஒரு கோவில் பகுதிக்கு சென்று அங்கு வந்தவரிடம் உண்டியலில் காசு போட வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னார்.
மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்து சென்ற பின்பும், இன்றுவரை ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை. இதுதான் அவர்கள் நீதி, நியாயம்.
நேற்று உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்து மத்திய பாஜக அரசின் ஜனநாயகத்துக்கு எதிரான போக்கிற்கு குட்டு வைத்தது.
பிரதமர் மோடி அயோத்தி கோவில் திறப்பதற்கு முன்னதாக தமிழ்நாடு உட்பட பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். விரதம் இருந்தார். இது அவரின் நம்பிக்கை. ஆனால் இன்றுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நீதி கிடைக்க செய்யவில்லை.
டெல்லியில் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு உத்தரவின் பேரில் போலீசாரும், ராணுவமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஜனநாயகத்தை, மாநில உரிமையை, பெண்களின் உரிமையை அழிக்க நினைக்கும் பாஜக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். பாஜகவின் தோல்வியே இந்தியாவின் வெற்றி என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்ல நாம் உறுதியேற்க வேண்டும்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வதந்தியா? : போலீசாருக்கு பாக்யராஜ் கொடுத்த விளக்கம்!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் திடீர் ஆலோசனைக் கூட்டங்கள்… உதறலில் மாசெக்கள்!