நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பூத் கமிட்டி வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது திமுக தலைமை.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தில் பெயர், முகவரி, ஆதார் அட்டை, வாக்காளர் எண், வாட்ஸ் அப் எண், தொடர்பு எண், மாவட்டம், நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்றத் தொகுதி, பூத் எண் என அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளதா, போலியானதா என்று சரிபார்க்க அறிவாலயத்தில் ஒரு டீம் வேலை செய்து வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திமுக கமிட்டி உறுப்பினர்களையும் செல்போன் எண் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு தொடர்புகொண்டு உங்கள் பெயர் என்ன, எந்த மாவட்டம், தொகுதி, ஆதார் எண், வாக்காளர் எண் ஆகியவற்றை கேட்டு சரி பார்த்து வருகிறது.
அப்படி சரி பார்த்ததில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தவறான செல்போன் எண், தவறான ஆதார் எண் இருப்பதைக் கண்டுப்பிடித்தும், சிலர் செல்போனுக்கு தொடர்புகொண்டும் போன் எடுக்காமல் இருப்பவர்கள் பட்டியலையும் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்து சரி பார்த்து அவசரமாக அனுப்புமாறு கேட்டுள்ளது திமுக தலைமை.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் போன் எடுக்காதது, செல்போன் நம்பர் மாறியிருப்பதை அறிவாலயம் கண்டுபிடித்து இவ்வளவு தீவிரமாக செயல்படுவதற்கு என்ன காரணம் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஒவ்வொரு பூத்துக்கும் வேட்பாளர்களின் சார்பாக பூத் பிரதிநிதி (பிஎல்ஏ 2 ) என்று ஒருவரை நியமிப்பார்கள், அவர்கள்தான் வாக்குச்சாவடிக்குள் சென்று வரமுடியும், அவருக்கு துணையாக ஒருவரை நியமிப்பார்கள், அவர்களுக்கு கீழ் ஐந்து பேர், பத்து பேர் என அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற அனைத்து கட்சிகளும் நியமிக்கும்.
அப்படித்தான் (பூத் கமிட்டி ஏஜென்ட்) நூறு வாக்குக்கு ஒருவர் என ஒரு பூத்துக்கு சுமார் பத்து பேர் முதல் 20 பேர் வரையில் நியமித்துள்ளது திமுக தலைமை.
இவர்களை விரைவில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து, மண்டலம் வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் தேவையையும் கேட்டு, அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல் கூட்டத்தை திருச்சியில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
முதல்வர் நேரடியாக நடத்தும் பூத் கமிட்டி கூட்டம் என்பதால் போலியான பூத் ஏஜென்ட் கமிட்டி உறுப்பினர்கள் இருந்துவிடக்கூடாது,
மேலும் யாரும் வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்குதான் ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
திருச்சியில் நடக்க இருக்கும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே என் நேரு கவனித்து வருகிறார். தனது பாணியில் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார் அமைச்சர் நேரு.
ஜுலை 26 ஆம் தேதி நிகழ்ச்சியை திருச்சியில் நடந்த திட்டமிட்டு இருக்கிறார்கள்” என அறிவாலயா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணங்காமுடி
அவரு யார்ணா?: 2k கிட்ஸ் பார்வையில் காமராஜர்…
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா: முதல்வரின் பயணத் திட்டம்!