திமுக அரசு ஒருபுறம் என்றால், அவர்களுக்கு துணையாக பி டீம் ஒன்று அதிமுகவுக்கு எதிராக களமிறங்கி போராடி வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் சிவகங்கையில் இன்று (மார்ச் 11) மாலை தொடங்கியது.
இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஒரே முதல்வர் நான் தான்
அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சி காலத்தின் சாதனையையும், 22 மாதகால திமுக அரசின் அலங்கோல ஆட்சியையும் மக்களிடம் எடுத்துக்கூற தான் இந்த பொதுக்கூட்டம்.
ஆட்சிக்காலத்தில் அதிக போராட்டங்களை சந்தித்த ஒரே முதல்வர் நான் தான். ஆனால் தற்போது ஒரு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க பயப்படுகிறது திமுக அரசு.
நான் விவசாய குடும்பத்தில் இருந்து உழைத்து இந்த இயக்கத்தின் உயரிய இடத்திற்கு வந்துள்ளேன். வேலுநாச்சியார், மருது சகோதர்கள், குயில் ஆகியோர் வாழ்ந்த வீரமண்ணிலே இருந்து சொல்கிறேன். நாங்கள் எந்த வழக்குக்கும் அஞ்சமாட்டோம்.” என்றார்.
பொற்காலம்; அலங்கோலம்
தொடர்ந்து அவர் பேசுகையில், ”எம்ஜிஆர் இறந்தபிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஆனால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்களால் ஜெயலலிதா தலைமுடி இழுத்து அவமானப்படுத்தப்பட்டார்.
அப்போது இனி வந்தால் முதல்வராக தான் சட்டமன்றத்தில் நுழைவேன் என்றார். அவர் சொன்னபடியே 1991ம் ஆண்டு வெற்றிபெற்று பின்னர் 15 ஆண்டுகால பொற்கால ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா.
ஆனால் இதற்கு மாறாக தான் தற்போது 22 மாதகால திமுக ஊழல், கமிஷன் என்று அலங்கோல ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றார்.
போராடும் திமுக பி டீம்
பின்னர், ”திமுக அரசு ஒருபுறம் என்றால், அவர்களுக்கு துணையாக பி டீம்(ஓபிஎஸ் தரப்பு) ஒன்று களமிறங்கியுள்ளது. அவர்கள் தான் இன்று காலையில் எனக்கு எதிராக இங்கே போராட்டம் நடத்தினார்கள். மக்களுக்காக உழைத்த கட்சியின் தலைவியான ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தை முடக்க நினைக்கிறார்கள் அவர்களா அதிமுகவினர்?
அதிமுகவை அழிக்க நினைக்கும் அவர்கள் அழிந்து போவார்கள் என்பது உறுதி. அவர்கள் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டோம். இந்த பி டீமைக் கொண்டு அதிமுகவை அழிக்க முதல்வர் ஸ்டாலின் நினைத்தால், திமுகவே எதிர்காலத்தில் அழிந்துபோகும் என்று தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
திமுக ஒரு கம்பெனி
அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனம் வைத்தார் எடப்பாடி. அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வந்த 22 மாத காலத்தில் மிகப்பெரிய மக்கள் விரோதத்தை சம்பாதித்த கட்சி திமுகதான். முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை அமைச்சராக்கியதுதான். வேறு எந்த சாதனையும் அவர் செய்யவில்லை. அதுதான் உண்மை.
சினிமா படம் எடுத்தால் அந்த படத்தை எல்லாம் உதயநிதியின் கம்பெனிக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த கம்பெனிக்கும் கொடுக்க முடியாது. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கி கிடக்கின்றன.
ஆக அரசியலிலும் சம்பாதிக்கிறார்கள். சினிமாத்துறையிலும் சம்பாதிக்கிறார்க்ள். சம்பாதிக்கிறதற்காகவே தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் மட்டும்தான். எனவே தான் திமுக ஒரு கட்சி அல்ல. அது கம்பெனி என்று கூறுகிறேன்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசியலில் இருந்து விலகியது ஏன் : போட்டுடைத்த நடிகர் ரஜினிகாந்த்
சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!