ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்தாள் (செப்டம்பர் 15), பெரியாரின் பிறந்தாள் (செப்டம்பர் 17) மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று நாட்களைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் மாதம் 15,16,17 ஆகிய மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில், திமுக ‘முப்பெரும் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திமுகவின் பவள விழா ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி, பெரியார் விருது பாப்பம்மாள், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் மற்றும் பேராசிரியர் விருது வி.பி.இராஜன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த ஆண்டு முதல் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திமுக. உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று திமுகவை காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை கலைஞர் 1985 ஆம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்.
பெரியார், அண்ணா, கலைஞர் பெயரிலான விருதுகள் திமுக காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தனது 75 ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் திமுக பெருமை அடைகிறது. இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகா விஷ்ணுவை அழைக்கலாம், ராமரை அழைக்க கூடாதா? மதுரை புத்தக திருவிழா சர்ச்சை!
பாக்ஸ் ஆபிஸில் விஜய் பற்ற வைத்த தீ… ‘கோட்’ கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?