முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது எனவும், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில், “தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த ரிட் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் குற்றவியல் பிரிவில் புதிய மனு தாக்கல் செய்யப்படுவதாகவும்” தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் உத்தரவு
இதைக் கேட்ட நீதிபதிகள், “குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கூடிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, வேலுமணி தரப்பில் ”இந்த வழக்கு சம்பந்தமாக தமக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது” என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசேன் முகமது அலி ஜின்னா, ”இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது” தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ”கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதேநேரத்தில் வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால் வழக்கின் இறுதியறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு இந்த வழக்கைத் தள்ளிவைத்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்